புதுடில்லி, ஆகஸ்ட் 20- மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதால் 8–ஆம் வகுப்பு வரையில் கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டாயத் தேர்ச்சி முறை ரத்தாகிறது.
ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்குச் செல்லத் தேர்ச்சியடையாத மாணவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும், சில மாணவ- மணவியர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், சில மாணவர்கள் படிப்பைத் தொடரச் சங்கடப்பட்டு பாதியிலேயே நின்று விடுகிறார்கள் என்றும் கருத்து நிலவியதால், மத்திய அரசு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையைக் கொண்டு வந்தது.
இதன்மூலம் சரியாகப் படிக்காத மாணவ- மாணவியரைக் கூட தேர்ச்சி அடையச் செய்து மேல் வகுப்பிற்கு சூழ்நிலை இருந்தது.இப்படிப்பட்ட குறைதிறன் மாணவர்களைப் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சியடையச் செய்வது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.
மேலும், கல்வித் தரமும் கெட்டுப் போகிறது எனக் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள ‘சி.ஏ.பி.இ.’ என்னும் மத்தியக் கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமை தாங்கினார்.
இதில் மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்கள், கல்வியாளர்கள், சி.ஏ.பி.இ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
விவாதக் கூட்டத்திற்குப் பின்பு, பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சியடைய வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்றார்.