சென்னை,ஆகஸ்ட் 20- சிலைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபலத் திரைப்பட இயக்குநர் வீ.சேகர் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீ.சேகரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிலைத் தடுப்புக் காவல்துறையினர், சென்னைப் பெருநகர இரண்டாவது நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.
ஆனால். 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து அவரைக் காவல்துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். ஆனால்,அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஒரு நாளோடு விசாரணையை நிறுத்திக் கொண்ட காவல்துறையினர் அவரை நேற்று பிற்பகல் மீண்டும் சென்னைப் பெருநகர இரண்டாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு வி.சேகர் ஒத்துழைக்கவில்லை என்றும், இதனால் அவரை மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சிலைத் திருட்டுத் தடுப்புக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் அவர் மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் அவர் பிணையில் விடுவிக்கக் கோரித் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்படுமா?விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவருக்குப் பிணை கிடைக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.