கிள்ளான், ஆகஸ்ட் 20 – சர்ச்சைக்குரிய கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு அதிவேக நெடுஞ்சாலைத்திட்டத்திற்கு (East Klang Valley Expressway – EKVE) அம்பாங் ஜெயா மாநகர சபை (MPAJ) அனுமதி வழங்கிவிட்டதாக ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்தத் திட்டத்திற்கு சில பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக ‘த ஸ்டார்’ குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, நடைபெற்ற சிறப்பு செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு அந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அக்குழுவின் தலைவர் அப்துல் ஹமித் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு, அம்பாங் ஜெயா மாநகர சபையின் 2020 உள்ளூர் திட்ட மாதிரியில் அந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் இடம்பெற்று அரசுப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
5 சுங்கச்சாவடிகளைக் கொண்ட இந்த நெடுஞ்சாலை 1.55 பில்லியன் கட்டுமான செலவில் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அம்பாங் காடுகளை அழிக்க வேண்டும் என்ற காரணத்தால் பொதுமக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட 106.65 ஹெக்டார் ஏக்கர் காடுகளை அரசுப் பதிவேட்டில் இருந்து அகற்றுமாறு கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிலாங்கூர் வனத்துறை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
– நன்றி ‘த ஸ்டார்’ இணையதளம்.