கோலாலம்பூர் – இன்று நடைபெற்று முடிந்த மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தல் வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் தேர்தல் முடிவுகளை மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் குழுவின் தலைவரும், இன்றைய வேட்புமனுத் தாக்கலுக்கான தேர்தல் அதிகாரியுமான டத்தோ பி.சகாதேவன் அறிவித்தார்.
இன்றைய வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொள்ள மொத்தம் 2,843 மஇகா கிளைகள் அதிகாரபூர்வமாகத் தகுதி பெற்றிருந்தன என அறிவித்த சகாதேவன், தேர்தல் குழு இன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி 450 வேட்பு மனுக்களைப் பெற்றன எனக் கூறினார்.
அதன்படி மொத்தமுள்ள கிளைகளில் 2,700 கிளைகள் மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை முன்மொழிந்துள்ளன என்றும், வேறு போட்டி வேட்பாளர்கள் இல்லாததினால், சுப்ரமணியம் ஏகமனதாக தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் மஇகா தலைமையகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான, மஇகாவினர் மத்தியில், பலத்த கைத்தட்டலுக்கிடையில் சகாதேவன் அறிவித்தார்.
3 வேட்பு மனுக்களை, அதிலிருந்து சில பிழைகளின் காரணமாகத் தாங்கள் நிராகரிக்க நேர்ந்ததாகவும் சகாதேவன் கூறினார்.
வேட்புமனுக்களின் எண்ணிக்கைப்படி ஏறத்தாழ 95 சதவீத மஇகா கிளைகள் சுப்ராவையே தேசியத் தலைவராக நியமிக்க ஆதரவளித்துள்ளன என்றும் சகாதேவன் மேலும் கூறினார்.