Home Featured நாடு “அடுத்த பொதுத்தேர்தலுக்கான போர்க்கள அறை நிர்மாணிப்போம்” – ஏற்புரையில் சுப்ரா அறிவிப்பு!

“அடுத்த பொதுத்தேர்தலுக்கான போர்க்கள அறை நிர்மாணிப்போம்” – ஏற்புரையில் சுப்ரா அறிவிப்பு!

884
0
SHARE
Ad

unnamed (4)கோலாலம்பூர் – மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்வு பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேர்தல் அதிகாரி டத்தோ பி.சகாதேவனின் அறிவிப்புக்குப் பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் பல முக்கிய அறிவிப்புகளைச் செய்தார்.

ஏறத்தாழ 20 மாதங்களாகக் கட்சியைக் காப்பாற்றத் தான் நடத்திய போராட்டத்திற்கு துணைநின்ற அனைவருக்கும் தனது ஏற்புரையில் சுப்ரா நன்றி தெரிவித்துக் கொண்டார். சங்கப் பதிவகம், நீதிமன்றங்கள், பத்திரிக்கைப் பிரச்சாரங்கள், கட்சியினரிடையே ஏற்படுத்தப்பட்ட பிளவுகள் ஆகியவற்றுக்கிடையில் தாங்கள் துவண்டு விடாது இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவித்த சுப்ரா, ஆகக் கடைசியாக இன்றைய தேர்தல் வேட்புமனுவின் போது கலவரம் நடத்த எதிரணியினர் முயன்றனர் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

“இன்று எதிரணியினர் இங்கு வந்து நம் மீது தாக்குதல் நடத்த முனைந்தபோது, நமது கட்சியைக் காப்பாற்றத் துணிச்சலுடன் எதிர்த்து நின்ற நமது ஆதரவாளர்களுக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். காயங்களை ஏந்தி அவர்கள் இன்று எதிர்த்து நின்று போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்” என்றும் சுப்ரா தனது உரையில் வருத்தத்துடன் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 20 மாதகாலப் போராட்டம் கட்சியையும், நமது ஆதரவாளர்களையும் மேலும் வலிமைப்படுத்தி, உறுதிப் படுத்தி, ஒற்றுமைப் படுத்தியுள்ளது என்றும் பலத்த கைத்தட்டலுக்கிடையில் சுப்ரா கூறினார்.

unnamed (3)

உடனடியாக நாம் செயல் நடவடிக்கைகளில் இறங்கி நமது பலத்தைக் காட்ட வேண்டும் என்று கூறிய அவர், முதல் கட்டமாக அடுத்த பொதுத் தேர்தலுக்கு இப்போதே தயாராகும் பொருட்டு, ஒரு தேர்தல் போர்க்கள அறை (War Room) மஇகா தலைமையகத்தில் நிர்மாணிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் வெற்றி மஇகாவின் வெற்றியில்தான் அடங்கியிருக்கின்றது என முழக்கமிட்ட சுப்ரா, இந்தியர்களை ஒன்றுபடுத்துவதிலும், மற்ற இனங்களுக்கு சமமாக நமது இந்தியர்களை முன்னேற்றுவதற்கும் மஇகா தனது தலைமைத்துவத்தின் கீழ் பாடுபடும் என்றும் உறுதியுடன் தெரிவித்துக் கொண்டார்.

இந்தப் போராட்டத்தில் தனக்கு துணைநின்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் டத்தோ ராஜூ, வில்சன், நீதிமன்ற வழக்கை முன் நின்று தொடுத்த டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பின்னர் மஇகா 2009 மத்திய செயலவை சார்பாக நீதிமன்ற வழக்கை முன்னெடுத்துச் சென்ற டத்தோ சரவணன் ஆகியோருக்கும் சுப்ரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பல்முனைப் போராட்டமாக விரிவடைந்த இந்தப் போராட்டத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த மகளிர் பகுதியினர், இளைஞர் பகுதியினர், புத்ரா, புத்ரி பிரிவினர், மஇகா தலைமையகப் பணியாளர்கள், தகவல் ஊடக ஆலோசகர்கள் ஆகியோருக்கும் சுப்ரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கட்சியைக் காப்பாற்றும் போராட்டத்தில் கடுமையாகப் பாடுபட்ட டத்தோ என்.முனியாண்டி தலைமையிலான மறுமலர்ச்சி குழுவினருக்கும் சுப்ரா நன்றி கூறினார்.

இன்றைய வேட்புமனுத் தாக்கலுக்கு வருகை தந்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவுக்கும் சுப்ரா தனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.