Home Featured நாடு பதவியேற்ற ஒரு மணிநேரத்தில் சுப்ரா முதல் அதிரடி மாற்றம் – மாநிலத் தலைவர்கள் நியமனம்!

பதவியேற்ற ஒரு மணிநேரத்தில் சுப்ரா முதல் அதிரடி மாற்றம் – மாநிலத் தலைவர்கள் நியமனம்!

712
0
SHARE
Ad

Subraகோலாலம்பூர் – எண்ணற்ற சவால்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று மஇகாவின் 9வது தேசியத் தலைவராகப் பதவியேற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அதிரடியாக, தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே செயலில் இறங்கியுள்ளார்.

டத்தோ பி.சகாதேவன், சுப்ரா அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவித்தவுடன், ஏற்புரை வழங்க மேடையேறிய சுப்ரா, உடனடியாக கட்சிக்கும் சமுதாயத்திற்குமான தனது திட்டங்களை அறிவித்தார்.

தேர்தல் போர்க்கள அறை

#TamilSchoolmychoice

unnamed (4)

முதல் கட்டமாக அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி மஇகா இப்போதே தயாராக வேண்டும் – இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு மஇகாவால்தான் முடியும் – என்ற நோக்கங்களுடன், மஇகா தலைமையகத்தில் தேர்தல் போர்க்கள அறை அமைக்கப்படும் என சுப்ரா அறிவித்தார்.

ஆங்கிலத்தில் இதனை war room என்று கூறுவார்கள். ஒரு தேர்தலை அணுகுவதிலும், வியூகங்களை வகுப்பதிலும், இரகசியமாகத் திட்டங்கள் தீட்டுவதற்கும், தகவல்கள், புள்ளி விவரங்கள் சேகரிப்பதற்கும் இந்த போர்க்கள அறை பயன்படுத்தப்படும்.

இந்திய இயக்கங்களின் ஆலோசனை மன்றம்

Subra 1

இன்று மலேசிய இந்திய சமுதாயத்தில் இருக்கின்ற பெரும் பிரச்சனைகளில்  ஒன்று இந்தியர்கள் பல அரசியல் கட்சிகளிலும், பல்வேறு சமூக இயக்கங்களிலும் பிரிந்து கிடப்பது.

இந்திய சமுதாயத்தின் வலுவான அடித்தளமாக இன்று உருமாறிவிட்ட இந்திய இயக்கங்களை நாடளாவிய நிலையில் ஒருங்கிணைக்க வேண்டும் –

ஒரே குடையின் கீழ் அவற்றை ஒருமுகப்படுத்தி செயல்பட வைக்க வேண்டும் – என்ற எதிர்பார்ப்பும், எண்ணமும் நீண்ட காலமாக இந்திய சமுதாயத்தில் இருந்து வருகின்றது.

அதற்கேற்ப, தேசிய நிலையிலான இந்திய இயக்கங்களின் ஆலோசனை மன்றம் அமைக்கப்படும் என்றும் சுப்ரா அறிவித்துள்ளார்.

மாநிலத் தலைவர்கள் மாற்றம்

unnamed (3)

ஆனால், எல்லாவற்றையும் விட சுப்ரா அறிவித்த கட்சி ரீதியான – முக்கியமான அரசியல் மாற்றமான – மாநிலத் தலைவர்கள் நியமனம்தான் கட்சி வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

மாநிலத் தலைவர்கள் மாற்றம் என்பது சுப்ரா தேசியத் தலைவரானதும் மேற்கொள்ளப்போகும் முதல் திட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே நிலவி வந்தாலும்,

பதவியேற்ற முதல் ஒரு மணி நேரத்திலேயே – தனது ஏற்புரையிலேயே அத்தகைய மாற்றங்களை நிகழ்த்தி – அவர் அறிவிப்புகள் செய்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அவருக்கு நெருக்கமானவர்களுக்குக்கூட மாநிலத் தலைவர்களின் மாற்றம் தெரிந்திருக்கவில்லை. யார் நியமனம் பெறப் போகின்றார்கள் என்பதும் தெரிந்திருக்கவில்லை.

இந்த புதிய நியமனங்கள் மூலம் கட்சியில் தனது தலைமைப் பொறுப்பையும், அடித்தளத்தையும் மேலும் வலுவுடன் அமைத்துக் கொள்ள சுப்ரா முனைந்துள்ளார் என்பது நேற்றைய அறிவிப்புகள் மூலம் தெளிவாகியுள்ளது.

அதே வேளையில், திங்கட்கிழமை முதல் புதிய மாநிலத் தலைவர்கள் தங்களின் மாநிலங்களில் உள்ள மஇகா மாநில அலுவலகங்களுக்குச் சென்று, தங்களின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும், மாநில அலுவலங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் சுப்ரா தனது உரையிலேயே சுப்ரா கட்டளையிட்டுள்ளார்.

காரணம், சில மாநிலங்களில் உள்ள தலைவர்கள், இதுவரை பழனிவேலுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டு, மாநில மஇகா அலுவலகங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.

சிலாங்கூர், மலாக்காவுக்கு சுப்ராவே தலைவர்

subra

மாநிலத் தலைவர்கள் மாற்றத்தில் செய்யப்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் சிலாங்கூர் மற்றும் மலாக்கா மாநிலங்களின் தலைமைத்துவத்தை சுப்ராவே ஏற்றுக் கொண்டிருப்பது.

நாட்டிலேயே பெரிய மாநிலமான சிலாங்கூர், மஇகாவின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களையும், அதற்கேற்ப பல்வேறு அரசியல் பிரச்சனைகளையும் கொண்ட மாநிலம்.

ஏற்கனவே, முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேலுவே, தலைமையேற்றிருந்த மாநிலம் சிலாங்கூர்.

எனவே, அந்த மாநிலத்தில் அரசியல் போராட்டங்களைச் சமாளிக்க தானே நேரடியாக களத்தில் இறங்குவதுதான் சரியாக இருக்கும் என்ற கணிப்புடன், சிலாங்கூர் மாநிலத்தின் பொறுப்பை ஏற்றிருக்கின்றார் சுப்ரா.

அடுத்ததாக, மலாக்கா மாநிலம்! சுப்ரா உறுப்பினராக இருக்கும் அவரது சொந்த மஇகா கிளையைக் கொண்டிருக்கும் மாநிலமாகும் மலாக்கா.

இங்கு, மாநில அரசாங்கத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும், ஒரே சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் டத்தோ மகாதேவன் இதுநாள்வரை பழனிவேலுவுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்ற காரணத்தால், அந்த மாநிலத்திலும் தானே நேரடியாகத் தலையிட்டுத் தற்காலிக தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநிலத்தின் தலைமைத்துவத்தையும் சுப்ராவே ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

கூட்டரசுப் பிரதேசத்திற்கு மீண்டும் சரவணன்

Saravanan - MIC -

கூட்டரசுப் பிரதேசத்தின் மாநிலப் பொறுப்பை மீண்டும் டத்தோ சரவணனிடமே ஒப்படைத்துள்ளார் சுப்ரா. இத்தனை நாட்களாக நடைபெற்ற கட்சிப் போராட்டத்தில் சுப்ராவுக்கு தோள்கொடுத்து, அவரது முன்னணித் தளபதியாக விளங்கி வந்த சரவணனுக்கு, மரியாதை கொடுக்கும் வகையில் மாநிலத்தின் மற்ற பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை சரவணனிடமே ஒப்படைப்பதாக அறிவித்தார் சுப்ரா.

ஆனால், மற்ற மாநிலங்களின் பொறுப்பாளர்களை சுப்ராவே நேரடியாக நியமனம் செய்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தனக்கு அடுத்த நிலையில் இருந்து தனக்கு ஆதரவாக இதுவரை செயல்பட்டுக் கொண்டிருந்த சரவணனுக்கு சுப்ரா தரும் மரியாதையாகவும், கௌரவமாகவும் கட்சியில் உள்ளவர்களால் பார்க்கப்படுகின்றது.

மாநிலத் தலைவர்களின் நியமனம் இப்போதைக்கு தற்காலிகமானது என்றும், அக்டோபரில் நடைபெறும் தேசிய நிலையிலான தேர்தல்களுக்குப் பின்னர் மீண்டும் மாற்றங்கள் நிகழக் கூடும் என்றும் சுப்ரா தனது ஏற்புரையின் போது அறிவித்தார்.

மற்ற மாநிலப் பொறுப்பாளர்கள்

சுப்ரா நியமித்த மற்ற மாநிலங்களின் பொறுப்பாளர்கள் பின்வருமாறு:

பெர்லிஸ் – வெங்கடசாமி

கெடா – டத்தோ ஜஸ்பால் சிங், துணைத் தலைவர் ஆனந்தன்,

பினாங்கு- கதிர்வேலு

பேராக் – டத்தோ இளங்கோ, துணைத் தலைவர் பாகான் டத்தோ தொகுதி தலைவர் சுப்ரமணியம், செயலாளர் தங்கராஜூ

சிலாங்கூர் – டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், துணைத் தலைவர் வில்சன், செயலாளர் டத்தோ எஸ்.எம்.முத்து, நிர்வாகச் செயலாளர் கரு.பார்த்திபன்

கூட்டரசுப் பிரதேசம் – டத்தோ எம்.சரவணன் (மற்ற பொறுப்பாளர்களை சரவணனே நியமனம் செய்வார்)

பகாங் – டத்தோ குணசேகரன்

நெகிரி செம்பிலான் – எல். மாணிக்கம்

மலாக்கா – டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

ஜோகூர்- அசோகன்

கிளந்தான் – வேலு

சபா – டத்தோ ஜோதி

தொகுதி – தேசிய நிலையிலான தேர்தல்கள்

தொடர்ந்து செப்டம்பரில் மஇகா தொகுதிகளின் பொறுப்பாளர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்றும், அக்டோபரில் தேசிய நிலையிலான தேர்தல்கள் நடைபெறும் என்றும் சுப்ரா அறிவித்துள்ளார்

பிரதமரின் தேதி வசதிகள் ஒத்து வந்தவுடன் அக்டோபரில் தேசிய நிலையிலான தேர்தல்கள் மற்றும் தேசியப் பொதுப் பேரவைக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்றும் அவர் நேற்றைய தனது ஏற்புரையில் கூறினார்.

எல்லாம் திட்டமிட்டபடி நிறைவடையும்போது, இந்த வருடத் தீபாவளியோடு, கட்சி புதிய தோற்றத்தோடும், வலிமையோடும், செயல்படத் தொடங்கும் என்ற நம்பிக்கை விதைகளையும் சுப்ரா தனது ஏற்புரையில் விதைத்திருக்கின்றார்.

கட்சியில் இனி அதிரடி மாற்றங்கள் ஆரம்பம்!

மேற்கண்ட புதிய மாநிலப் பொறுப்பாளர்களுடன் கட்சியில் மேலும் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்றும் அறிவித்த சுப்ரா, பதவியேற்றவுடன் சுறுசுறுப்புடன், உடனடியாகவும், செயல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, கட்சியினரிடையே ஒரு புறத்தில் மகிழ்ச்சியையும், இன்னொரு புறத்தில் சில அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரா யாருடைய கைப்பாவையாகவும், எந்த ஒரு குழுவினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டும், செயல்பட மாட்டார் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் அவரது உரையும் – செயல் நடவடிக்கை அறிவிப்புகளும் ஏற்படுத்தியிருக்கின்றது.

கட்சியில் இதுவரை நிகழ்ந்து வந்த குழப்பங்கள் – சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வந்து – மஇகா இனி புதிய பாதையில் – புத்துணர்வுடனும் – புத்தெழுச்சியுடனும் செயல்படும் என்ற நம்பிக்கையை இந்திய சமுதாயத்திலும், மஇகாவினரிடத்திலும் தோற்றுவித்துள்ளது அவரது நேற்றைய ஏற்புரையும் – உடனடியான செயல் நடவடிக்கைகளும்!

அந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவரது அடுத்த கட்ட செயல் நடவடிக்கைகள் தொடரட்டும் – தொடர வேண்டும் – என எதிர்பார்ப்போம்!

-இரா.முத்தரசன்