பெர்லின், ஆகஸ்ட் 22 – சொகுசு கார்கள் என்றில்லாமல் மலிவு விலை கார்களிலும் மென்பொருள் தொழில்நுட்பம் என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. மலிவு கார்களுக்கே இப்படி என்றால், அதிக விலை கொண்ட ஆடம்பரக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இப்போதெல்லாம், கார்களுக்கான அம்சங்கள் மட்டுமல்லாமல் காரில் இயங்கக் கூடிய, காரை இயக்கக் கூடிய மென்பொருட்களையும் கவனத்தில் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கும் நிறுவனங்கள் வழக்கம் போல் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தான். மென்பொருள் தொழில்நுட்பத்தை கார்களில் புகுத்தி, பயணர்களின் பெரும்பாலான தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்து விடுகின்றன. தற்போது இதன் அடுத்த கட்டமாகத் தான், கார்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் இரு பெரு நிறுவனங்களும் இறங்கி உள்ளன.
இந்நிலையில், இரு நிறுவனங்களிடமும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெய்ம்லர், தொழிநுட்ப ரீதியிலான வர்த்தகத்தை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக, டெய்ம்லர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டீட்டர் செட்ச் கூறுகையில், “ஆப்பிள் மற்றும் கூகுள், கார்களுக்கான மென்பொருள் அமைப்பினை வழங்க வேண்டும். இந்த மென்பொருள் அமைப்பு ஒரு சில கார்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கார்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து கார்களும் பாதுகாப்பானதாகவும், நுண்ணறிவு கொண்டதாகவும் மாறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெய்ம்லர் நிறுவனம் மட்டுமல்லாது வோக்ஸ்வாகன் உள்ளிட்ட பெரும்பாலான ஆடம்பரக் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் அமைப்பினை தங்கள் கார்களில் மேம்படுத்தி வருகின்றன.