சென்னை – மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்க சில விஷமிகள் முயன்றதாக வெளியான தகவல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தமிழக தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்றைய தினம் இரவு சுமார் 11.50 மணியளவில் 174 பயணிகள் மற்றும் ஏழு விமானப் பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட மாஸ் விமானம் தரையிறங்கி உள்ளது.
அப்போது ஓடுபாதையின் வடதிசையில் இருந்து கண்ணைப் பறிக்கும் மர்ம ஒளிப்பிழம்பு (laser beam) அந்த விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டுள்ளது. இதனால் விமானிகள் விமானத்தை தரை இறக்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாகவும், எனினும் 30 வினாடிகள் வரை நீடித்த அந்த ஒளிப்பிழம்புக்கு இடையிலும் வெகு சாதுரியமாக அந்த விமானத்தை விமானிகள் தரையிறக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகளிடம் விமானிகள் அந்த ஒளிப்பிழம்பு குறித்து புகார் அளித்ததாகவும், அதன் பேரில் சென்னை காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அன்று இரவே விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் யாரும் சிக்கவில்லை.
லேசர் போன்ற மிக அதிகமான ஆற்றல் கொண்ட ஒளிக் கீற்றின் மூலம் மேற்படி விமானத்தை நிலைகுலையச் செய்து, விபத்துக்குள்ளாக்க தீவிரவாதிகள் தீட்டிய சதி திட்டமாகவும் இம்முயற்சி இருக்கலாம் எனக் கருதப்படுவதாக தமிழக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் துபாய் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்கியபோதும் இதுபோல் மர்ம ஒளி பாய்ச்சப்பட்டதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நடவடிக்கையில் இறங்கிய போலீசார், இரண்டு கட்டுமானத் தொழிலாளர்களை கைது செய்தது நினைவிருக்கலாம்.