கொழும்பு- சொந்த பூமியிலேயே அகதிகள் போல அல்லல்பட்டுக் கிடந்த தமிழர்களைக் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவர்களது சொந்தக் கிராமத்தில் மறு குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.
இலங்கையில் போரின் போது தமிழர்கள் தங்களது வீடு, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, உயிர் பிழைத்தால் போதுமென சொந்தக் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து சிதறிப் போனார்கள்.
அப்படிச் சிதறிப்போன சம்பூர் கிராமத்துத் தமிழர்களான 25 குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக அவர்களுடைய சொந்த நிலத்துக்கான ஆவணங்களை வழங்கி, அதிபர் சிறிசேனா மறுகுடியமர்த்தும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சம்பூர் கிராமம். இடம்பெயர்ந்த 825 குடும்பங்களில் இதுவரை 205 குடும்பத்தினர் சொந்தக் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
மற்றவர்களுக்குரிய நிலத்தில் தற்போது கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் புதிய இடத்துக்கு முகாமை மாற்றிய உடன், சம்பந்தப்பட்ட தமிழர்களிடம் அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய அதிபர் சிறிசேனா, ‘‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு எல்லா வசதிகளையும் எனது தலைமையிலான அரசு மனதார செய்து தர நடவடிக்கை எடுக்கும். நாட்டில் மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்குக் கிடைக்கும் எல்லா வசதிகளும் இந்தப் பகுதி மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.