புதுடில்லி- சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகா அரசு மற்றும் திமுக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவிற்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகா அரசு மற்றும் திமுக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
மேலும், பா.ஜ.க.வின் சுப்பிரமணியசாமி இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா உள்பட 4 பேரும் 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர்.அதன்படி முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா சார்பில் 46 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களும் வரும் வெள்ளிக்கிழமையன்று பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளன.
ஜெயலலிதா தன்னுடைய மனுவில், “நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தெளிவாகவே இருக்கிறது. சொத்துக் குவிப்புவழக்கில் சட்டரீதியான எந்தக் கேள்வியும் எழவில்லை. எனவே, தாம் உட்பட 4 பேரையும் விடுதலை செய்தது சரியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.