கோலாலம்பூர் – ‘ரோஜா’, ‘பம்பாய்’ என ஒரு காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் அரவிந்த் சாமி.
சிவந்த நிறம், எடுப்பான தோற்றம், வெள்ளந்தி சிரிப்பு, திறமையான நடிப்பு போன்ற தனித்துவமான விசயங்களால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாகக் கொண்டிருந்தவர்.
“கட்டுனா அரவிந்த் சாமி மாதிரி ஒரு மாப்பிள்ளையை தான் கட்டுவேன்” என்று ஒரு காலத்தில் பல பெண்கள் தவம் இருந்த அளவுக்கு சினிமாவில் ஒரு ஆணழகனாய் வலம் வந்தவர்.அப்படி ஜொலித்துக் கொண்டிருந்தவரின் வாழ்வில் நடந்த ஒரு எதிர்பாராத விபத்து அவரை ஒட்டுமொத்தமாய் புரட்டிப் போட்டிருக்கிறது.
அண்மையில் இது குறித்து ஆனந்தவிகடன் வார இதழுக்கு அரவிந்த்சாமி அளித்துள்ள பேட்டியில்,
“ஒரு விபத்து. தண்டுவடத்தில் அடி. ஒரு வருஷம் படுத்த படுக்கை. அதில் இருந்து மீள நாலு வருஷங்கள் ஆச்சு. படுக்கையில் இருந்து எழக்கூட முடியாத சூழல். கடுமையான வலி. ஒரு கால் வேற வராமல்போயிடுச்சு. அந்த சமயத்தில் நண்பர் பிஜு, ‘ஆயுர்வேத சிகிச்சை முயற்சி பண்ணு’னு சொன்னார்.”
“மூணு மாச சிகிச்சையில் மொத்த வலியில் இருந்தும் விடுதலை. ஆனா, அதுக்கு முன் ஏகப்பட்ட மாத்திரைகள் எடுத்துக்கிட்டதால முடி உதிர்ந்து, உடல் எடை கூடி… நான் நானாக இல்லை. 110 கிலோ எடை இருந்தேன். அந்தச் சமயத்துலதான் மணி சார் கூப்பிட்டார். ‘படம் பேர் ‘கடல்’. நீதான் இந்த கேரக்டர் பண்ற. உனக்கு ரெண்டு மாசம் டைம்… வா’னு கூப்பிட்டார். திரும்ப எக்சர்சைஸ்னு ஆரம்பிச்சு, வலி வந்துடுமோனு பயம். ஆனா, அவரின் ஊக்கத்தால் ரெண்டு மாசத்துல 15 கிலோ குறைச்சேன். ‘கடல்’ படம், என் வாழ்க்கையை மாத்திப்போட்ட ஒரு அனுபவம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னை ‘அழகு’ என்று வர்ணித்தவர்கள் குறித்து அரவிந்த் சாமி கூறுகையில்,
“என்னடா இது .. நம்ம நடிப்பைப் பற்றி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாங்களே’னு அப்போ வருத்தமா இருக்கும். ‘அழகு’னு பாராட்டினப்பவும் நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. விபத்துக்குப் பிறகு என் போட்டோக்களை ஷேர் பண்ணி, ‘எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான் பாருய்யா?’னு சொன்ன போதும் அதைப் பத்தி கவலைப்படலை. அழகை ஒரு காம்ப்ளிமென்டா நான் நினைச்சதே இல்லை. ஏன்னா, அதில் என் உழைப்போ, திறமையோ எதுவும் இல்லையே!” என்று தெரிவித்துள்ளார்.
சரி… அரவிந்த்சாமி இப்ப என்னதான் பண்றார்? என்று கேட்டால், வெகுவிரைவில் ஒரு படத்தில் அவரை வில்லனாகப் பார்க்கப் போகிறோம். ஜெயம்ரவி, நயந்தாரா நடித்துள்ள ‘தனிஒருவன்’ படத்தில், அரவிந்த்சாமி தான் வில்லன்.
தொகுப்பு: செல்லியல்