கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்றக் கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைப்பிரதமர் மொகிதீன் யாசின் அம்னோ துணைத்தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்படலாம் என ஆரூடங்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து அம்னோ ஆர்வலர் சகாபுடின் ஹுசைன் இன்று தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இருவேறு கருத்துகள் நிலவி வந்தாலும், மொகிதீன் வெளியேற்றப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதற்காகவும், 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை வெளிப்படையாக விமர்சித்தத்தற்காகவும் மொகிதீன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் சகாபுதின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 28-ம் தேதி, துணைப்பிரதமர் பதவியில் இருந்து மொகிதீன் யாசின் அதிரடியாக நீக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அப்பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.