சென்னை – இயற்கையான சூழலில் வாழ வேண்டும் என்று விரும்பிய நடிகர் பார்த்திபன், சென்னையில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரக்காணம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.
அங்கு தான் வாங்கியிருக்கும் தோட்டத்தில், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதாகவும், ஒரு லாரி கொண்டுவந்து கூவம் சகதியை அள்ளிப்போய் என் தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அண்மையில் நடைபெற்ற ‘மய்யம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் கூறியிருந்தார்.
இந்நிலையில், ‘மண்புழு விஞ்ஞானி’ முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், “கூவத்தில் இருப்பது சாக்கடை மட்டுமல்ல, ஆபத்தான தொழிற்சாலை விஷங்களும் கலந்துள்ளன. இதனால்தான், கூவம் நீரில் எந்த தாவரமும் வளரவில்லை. கூவத்தைச் சுத்தம் செய்கிறோம் என்று, அதன் கழிவுகளை வயலில் கொட்டினால் நிலம் கெட்டுப் போய்விடும். இப்போது உள்ள சூழ்நிலையில் கூவத்தில் உள்ள நீரை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதன் பிறகு முறையாகச் சுத்திகரித்த பிறகே கழிவுகளையும், நீரையும் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மீது உள்ள ஆர்வத்தில், கூவத்தில் உள்ள கழிவுகளை யாரும் வயலுக்குக் கொண்டு சென்று பயன்படுத்த வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.