கோலாலம்பூர் – மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் குழுத் தலைவரும், மாணவப் போராளியுமான ஃபாஹ்மி சைனோல் தலைமையில் சுமார் 50 முதல் 100 பேர் அடங்கிய குழு ஒன்று, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தின் முன்பு நேற்று குந்தியிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஃபாஹ்மி நேற்று மலாய் மெயில் இணையதளத்திடம் கூறுகையில், “பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கூறி நாங்கள் நாடாளுமன்றத்தின் முன்பு கூடியிருக்கிறோம். மேலும், அவர் பதவி விலகிய பின்பு எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கூடி தற்போது இருக்கும் நடப்பு பிரச்சனைகளுக்கான மாற்று வழிகளை எங்களிடம் கூற வேண்டும். எங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை நாங்கள் நாடாளுமன்றத்தை விட்டு நகர மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்று இரவு மாணவர்களிடம் கூட்டம் குறைந்து 10 ஆகிவிட்ட நிலையிலும் ஃபாஹ்மி தாங்கள் இன்னும் போராட்டத்தில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அக்குழு தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற உணவு, மறைப்புகள், கூடாரங்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஆகியவற்றுக்கு பொதுமக்களின் உதவிகளை நாடி வருகின்றனர்.