Home Featured தமிழ் நாடு ஒரே நாளில் 22 முக்கியத் திட்டங்கள் – முதல்வர் ஜெயலலிதா அசத்தல்!

ஒரே நாளில் 22 முக்கியத் திட்டங்கள் – முதல்வர் ஜெயலலிதா அசத்தல்!

594
0
SHARE
Ad

jayalalitha1சென்னை – சொத்துக் குவிப்பு விவகாரங்களுக்குப் பிறகு, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றபின், கூடிய சட்டப்பேரவையின் இரண்டாம் நாளான இன்று, 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். சுகாதாரத் துறையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த புதிய திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் தாய்மார்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜெயலலிதா அறிவித்த மிக முக்கியத் திட்டங்களைக் கீழே காண்க:

புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்

#TamilSchoolmychoice

நடப்பு ஆண்டில், 6 கோடி ரூபாய் செலவில் 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், 12 கோடி ரூபாய் செலவில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 70 கோடி ரூபாய் செலவில் 39 புதிய வட்டங்களில் வட்டத்திற்கு ஒன்று வீதம், 39 வட்டம் சாரா மருத்துவமனைகள், தாலுக்கா மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட இருக்கின்றன.

குழந்தைகள் சிகிச்சை மையம்

தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தாம்பரம், திருத்தணி, குடியாத்தம், ராஜபாளையம் மற்றும் விருதாச்சலம் ஆகிய 5 மருத்துவமனைகளில் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜபாளையத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில், குழந்தைகளுக்கான பிரத்யேகப் பிரிவு சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள இளம் குழந்தைகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க, முதல் கட்டமாக 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம் சிசு பராமரிப்பு மையங்களுக்கு 10 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் செயற்கை வாயு கருவிகள் (ventilator) வழங்கப்பட இருக்கின்றன.

108 திட்டத்தில் புதிய ஆம்புலன்ஸ்கள்

நடப்பு ஆண்டில், 5 கோடி ரூபாய் செலவில் 50 பழைய 108 ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிய ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு புற்று நோய் மையத்தில் சிறப்பு பணிகள்

சென்னை அடையாறு புற்று நோய் மையம், 120 கோடி ரூபாய் செலவில் மாநில உயர்நிலை மையமாகவும், ஒப்புயர்வு மையமாகவும் வலுப்படுத்தப்பட இருக்கிறது.

ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு 

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஐந்து வகை உயர் சிகிச்சைகளுக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கணிசமாக உயர்ந்து வருவதால், இந்த தொகுப்பு நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொகுப்பு நிதிக்கு கூடுதலாக 25 கோடி ரூபாய் அரசின் பங்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே  177 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை நோயை கண்காணிக்க சிறப்பு கருவிகள்

சர்க்கரை நோயாளிகளின் மூன்று மாத கால சர்க்கரை சராசரி அளவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க HbA1C ‘அனலைசர்’ (Analyzer) கருவியும், நோய் தாக்கம் மற்றும் ரத்த உட்கூறுகளின் அளவை கண்டறிய ‘செல் கவுன்டர்’ (Cell Counter) கருவியும், 302 அரசு மருத்துவமனைகளுக்கு 9 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்பட இருக்கிறது.

நடப்பு ஆண்டில் தொற்றா நோய் தடுப்பு திட்டம், பேறுசார் மற்றும் குழந்தை நலத் திட்டம், நகரும் மருத்துவப் பிரிவு திட்டம் ஆகியவற்றிற்காக கூடுதலாக மருந்துகள் வழங்க 102 கோடியே 51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட இருக்கின்றன.

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பின் படி, புதுக்கோட்டையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், தென் தமிழ்நாட்டில் 50 கோடி ரூபாய் செலவில், ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு உடல் பரிசோதனைத் திட்டங்கள்

சென்னை அரசு பொது மருத்துவமனையில்‚ ‘அம்மா முழு உடல் பரிசோதனை‛ (Amma Master Health Check-up) என்ற திட்டமும், பெண்களுக்கு பிரத்யேகமாக ‘அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை’ (Amma Women Special Master Health Checkup) என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்திலுள்ள 385 வட்டார மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், அனைத்து அடிப்படை பரிசோதனைகளையும் இலவசமாக மேற்கொள்ள அம்மா ஆரோக்கியத் திட்டம் என்ற ஒரு புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் மகப்பேறு காலத்தை கருத்தில் கொள்ளும் வகையில், அம்மா மகப்பேறு சஞ்சீவி என்ற திட்டத்தின் கீழ், 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.