கோலாலம்பூர் – “அதிகாரத்தில் இருப்பவர்கள் முட்டாள்தனமாக விஷயங்களைப் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவரான டத்தோஸ்ரீ நசிர் ரசாக் (படம்) கூறியுள்ளார்.
பிரதமர் நஜிப்பின் சகோதரரான அவர், யாரைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறுகிறார் என்பதை தெரிவிக்கவில்லை.
அதே வேளையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப மக்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்றும் நசிர் ரசாக் அறிவுறுத்தி உள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலையை விவரிக்கும் வகையில், வால் ஸ்டிரீட் சின்னமான காளை மாடு கீழே விழுந்திருப்பது போன்ற படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நசிர். அதன் மீது அரசுக்கு அறிவுரை கூறும் வகையில் சில வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
“(காளை) இறந்துவிட்டதா அல்லது காயமடைந்துள்ளதா? சீனா தீர்மானிக்கும். ஆனாலும் புதிய மதிப்பீடுகள் வளர்ந்து வரும் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். அதற்கேற்ப இந்நிலையை ஏற்றுக் கொண்டு, விரைவாக அனுசரித்துப் போக வேண்டும்” என்று நசிர் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க் நகரின் வால் ஸ்டிரீட் சாலையில் வெண்கலத்தால் ஆன காளையின் சிலை உள்ளது. அமெரிக்காவின் வலுவான பொருளாதார நிலையை சித்தரிக்கும் விதமாக கடந்த 1989ஆம் ஆண்டு அர்டுரோ டி மோடிகா இந்தச் சிலையை நிறுவியிருந்தார்.