கோலாலம்பூர்- பெர்சே 4.0 பேரணியின் போது கலவர தடுப்பு ஆயுதங்களில் ஒன்றாக டேசர் (Taser) வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என துணை ஐஜிபி டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் (படம்) தெரிவித்துள்ளார்.
டேசர் என்பது சிறியவகை துப்பாக்கி ரவைகளைப் பயன்படுத்தி, அது பாய்ச்சப்படும்போது, அதன்மூலம் மின்சார அதிர்ச்சிகளை கலவரக்காரர்கள் மீது ஏற்படுத்தும் ரகத்திலான துப்பாக்கிகளாகும்.
டேசர் வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று அவர் செய்தியாளர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
டேசர் துப்பாக்கியின் மாதிரி ஒன்று
“காவல்துறையிடம் டேசர் வகை துப்பாக்கிகள் உள்ளன. அவை காவல்துறையின் வெவ்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய துப்பாக்கிகள் குற்றவாளிகளை தற்காலிகமாக செயலிழக்க வைக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் பெர்சே பேரணியின்போது இவற்றைப் பயன்படுத்த மாட்டோம். வருங்காலத்தில் சூழ்நிலைக்கேற்பவே அவை பயன்படுத்தப்படும்,” என்றார் நூர் ரஷிட்.
பெர்சே பேரணியின்போது கலவரம் வெடித்தாலோ, தங்களைக் கைது செய்வதை போராட்டக்காரர்கள் எதிர்த்தாலோ, டேசர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் என நூர் ரஷிட் கூறியதாக சீன நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே நூர் ரஷிட் மேற்கண்டவாறு விளக்கமளித்தார். பொது மக்கள் தங்கள் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான உரிமைகளை காவல்துறை மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதே சமயம் பொதுமக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்ட் 26 முதல் 31 வரை 18 சாலை வழிகள் மூடப்படும்:
இதற்கிடையே ஆகஸ்ட் 26 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் கோலாலம்பூரில் 18 சாலை வழிகள் மூடப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களையொட்டி டத்தாரான் மெர்டேக்காவைச் சுற்றியுள்ள 18 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடுதல் விவரங்களைப் பெற “Trafik KL” என்ற முகநூல் பக்கத்தையும், “trafik_kl” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பார்வையிடுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.