Home Featured நாடு முன்னாள் மந்திரி பெசார் கிர் தோயோவுக்கு மாரடைப்பு!

முன்னாள் மந்திரி பெசார் கிர் தோயோவுக்கு மாரடைப்பு!

656
0
SHARE
Ad

Khir-Toyo-Featureகோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோவுக்கு  (படம்) இன்று புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெதுவோட்டப் பயிற்சியில் கிர் தோயோ ஈடுபட்டிருந்தபோது அவர் நிலைகுலைந்து சாய்ந்தார் என்றும் தனது நினைவை இழந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செலாயாங் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட கிர் தோயோவுக்கு முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்டு, பின்னர் அவர் தேசிய இருதய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர் தனது சுயநினைவைப் பெற்றதாகவும், தற்போது உரிய சிகிச்சைகளைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 வயதான பல் மருத்துவரான கிர் தோயோ, சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வந்த காலகட்டத்தில் 2000ஆம் ஆண்டில் சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் பலம் வாய்ந்த அம்னோ தலைவர்களில் ஒருவராக உயர்ந்து வந்த அவர் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வசம் சிலாங்கூர் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தனது மந்திரி பெசார் பதவியை இழந்தார்.

பாடாங் ஜாவா பகுதியிலுள்ள இந்து ஆலய உடைப்பு விவகாரத்தில் அவர் தன்மூப்பாக நடந்து கொண்ட விதத்தாலும், அதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில இந்தியர்களிடையே தேசிய முன்னணிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு, அதோடு, கிர் தோயோவுக்கு எதிராக ஏற்பட்ட வெறுப்புணர்வு ஆகியவற்றால், 2008 பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் தேசிய முன்னணி கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன் பின்னர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி, ஒரு நிலத்தையும், ஒரு பங்களாவையும் கிர் தோயோ சந்தை விலையை விட குறைவாகப் பெற்றார் என்பதற்காக அவர் மீது குற்ற விசாரணை சுமத்தப்பட்டு அவருக்கு 12 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 அந்த தீர்ப்பைத் தொடர்ந்து அவர் கூட்டரசு உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடு நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.