சென்னை – ரஜினியின் லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டத்தை வேந்தர் மூவீஸ் ஈடு செய்யா விட்டால் அந்நிறுவனம் தயாரித்துள்ள பாயும் புலி படத்தை வெளியிட மாட்டோம் எனத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை வேந்தர் மூவிஸ் மொத்த விலைக்கு வாங்கித் தமிழ்நாடு முழுவதிலும் வெளியிட்டது. ஆனால், படம் ஓடவில்லை.
அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களும், படத்தைத் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த நட்டத்திற்கு ஆளானார்கள்.
12 கோடி ரூபாய் நட்ட ஈடாகத் தருவதாகக் கூறி, அதில் பாதியை அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தந்தார். அது உரியவர்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டது.
பின்னர் மீதிப் பணமும் தந்துவிட்டனர்; பிரச்சனை முடிந்தது எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்குப் பின்னர் இதுநாள் வரை அமைதியாக இருந்த திரையரங்கு உரிமையாளர்கள், திடீரென இப்போது நட்ட ஈட்டைத் தந்தால்தான் வேந்தர் மூவிஸின் பாயும் புலியை வெளியிடுவோம் எனத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவிற்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளதாவது:
“பாயும்புலி படத்திற்குத் தடை என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் ஆகும். மேலும், இதுதொடர்பாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. இது தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல்.
‘லிங்கா’வில் ஏற்பட்ட நட்டத்துக்குப் ‘பாயும் புலி’ திரைப்படத்துக்குத் தடை விதிப்பது எந்தவிதத்திலும் தொழில் தர்மம் அல்ல.
தடையை நீக்காவிட்டால் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்படும்” எனத் தெரிவித்துள்ளது.