வாஷிங்டன் – விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராகப் பதவி வகித்து வருவதால், அமெரிக்க அரசியல் சட்ட விதிமுறையின்படி, அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது.
எனவே, அவருடைய ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் ஜோ பிடென் முதற்கொண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிட பலருக்குள் போட்டி நிலவினாலும், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் அதிபராகப் போட்டியிடுவதற்கே அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களைப் பொருத்தளவில் அனைவரும் ஓரணியில் திரண்டு வந்து, ஹிலாரி கிளிண்டனையே ஆதரிக்கிறார்கள்.
கடந்த 2012 தேர்தலில் ஒபாமாவுக்கு மிகப் பெருமளவில் தேர்தல் நிதி வழங்கிய காரின் பிர்க்லேண்ட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கே தனது முழு ஆதரவு எனத் தெரிவித்துள்ளார்.