சிங்கப்பூர் – பொதுவாக இரண்டு பேருக்கு இடையில் சண்டை நடந்தால், சுற்றி இருப்பவர்கள் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் விலக்கி விடுவார்கள். விலக்கி விடுபவர்களுக்கு அடியோ, பாதிப்புகளோ ஏற்படுவது நிச்சயம். இந்நிலையில், சண்டையிடுபவர்களை விலக்கி விடுவது உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிட்டால் என்ன செய்வது? வேடிக்கை மட்டுமே தானே பார்க்க முடியும்.
அப்படி, தான் ஆர்வத்துடன் பார்த்த சண்டைக் காட்சி ஒன்றை, சிங்கப்பூரில் பிஎச்டி பயின்று வரும் அபிஷேக் அம்படே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிங்கப்பூரின், நன்யாங் பல்கலைக்கழக வளாகத்தின் அருகே நேற்று, விஷப் பாம்புகளின் அரசனான ராஜ நாகமும், விஷமில்லாப் பாம்புகளின் அரசனான மலைப்பாம்பும், ஒன்றை ஒன்று மூர்க்கத் தனமாக சண்டையிட்டுள்ளன. இக்காட்சி, சுற்றி இருந்தவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சண்டை, ஒருவழியாக சமாதானத்திற்கு வந்து, இரு பாம்புகளும் தனித் தனியே பிரிந்து சென்று விட்டன.
எனினும், தகவல் அறிந்து விரைந்து வந்த விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டையும் பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.