கோலாலம்பூர் – ‘கடல்’ படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமியின் அந்நாள்-இந்நாள் இரசிகர்கள் (இரசிகைகள்?) ஆவலுடன் காத்திருந்த படம் ‘தனிஒருவன்’. காவல் துறையினரின் போராட்டங்களை விளக்கும் எத்தனையோ தமிழ்ப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.
படத்தில் முதல் பாதியும், இரண்டாம் பாதியில் சில இடங்களும் பயங்கர இழுவை. அதோடு, காவல் துறையினரின் நடத்தை, தமிழக அரசியல்வாதிகளின் போக்கு, வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும், மருந்துகளில் ஒரிஜினல், போலி, அதனால் ஏற்படும் பாதிப்புகள், மருந்துகளின் வணிக விஞ்ஞானங்கள் என்ன என்பது போன்ற விளக்கங்கள் – என படம் முழுக்க ஒரே பிரச்சார நெடி.
இருந்தாலும், அரவிந்த்சாமிக்காக தாராளமாக ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
கதை-திரைக்கதை
படத்தின் தொடக்கமே விறுவிறுப்புதான்! கட்சித் தலைவர் நாசரின் சாதாரண அரசியல் தொண்டனாகத் திரிந்து கொண்டிருக்கும் தம்பி ராமையா, தனது பத்தாம் வகுப்பு மகனோடு கல்வி உதவி கேட்க நாசரைக் காணச் செல்கின்றார். அப்போது அவர் நாசரைச் சந்திக்கும் அறையில், எதிர்பாராதவிதமாக நாசர் சக கட்சிக்காரரைக் கொன்றுவிட அந்தப் பழியை தம்பி ராமையாவை ஏற்றுக் கொள்ளச் சொல்கின்றார் நாசர்.
ஆனால், ராமையாவின் புத்திசாலி மகனோ, அந்தப் பழியை நான் ஏற்றுக் கொண்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செல்கின்றேன், மாறாக, எனது தந்தைக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி கொடுங்கள் என்று வாக்குறுதி வாங்கிக் கொள்கின்றான்.
சீர்திருத்தப்பள்ளி சென்று திரும்பும் மகன் படித்து விஞ்ஞானியாக – அறிவாளியாக – ஆனால் அதே சமயம் பெரிய அளவிலான கிரிமினல் தலைவனாக உருவெடுக்கின்றான். அவன்தான் அரவிந்த்சாமி.
சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்புபவர் விஞ்ஞானி என்பதும், அதே சமயம் பெரிய பணக்கார கிரிமினல் என்பதும்தான் நம்ப முடியாத நெருடல்.
இன்னொரு முனையில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சி எடுக்கும் ஜெயம் ரவி, நான்கு சக காவல் துறை அதிகாரிகளோடு சேர்ந்து கொண்டு, நேர்மையான போலீஸ்காரராக குற்றங்களைத் துடைத்தொழிக்கின்றார்.
ரவி துப்பறியும் வழக்கில், பின்னணியில் இருக்கும் தாதா அரவிந்த்சாமி என்பதைக் கண்டுபிடிக்க, பின்னர் இருவருக்கும் இடையில் நடக்கும் போராட்டம் படத்தின் மீதிக்கதை.
இரண்டாம் பாதியில் ஒரு திரில்லர் ரகத்தில் விறுவிறுப்பாக கதையை நகர்த்தியிருக்கின்றார்கள். குறிப்பாக, ரவியின் உடலுக்குள் உடனுக்குடன் நடப்பதை அறிவிக்கும் மோனிட்டர் கருவியைப் பொருத்தி, எல்லாவற்றையும் அரவிந்த்சாமி தெரிந்து கொள்வதும், ரவி குழப்பம் அடைவதும் விறுவிறுப்பு.
இருந்தாலும், இரண்டாவது பாதியில் மீண்டும் இடையிடையே அரவிந்த்சாமி, ரவி இருவரும் வாழ்க்கைத் தத்துவங்களைப் பேசி படத்தை இழுவையாக்கி விடுகின்றார்கள்.
திரைக்கதை என்று பார்த்தாலும், புதுமையான அம்சங்கள் ஏதும் இல்லை. வழக்கமான காவல்துறையினர், வழக்கமான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், மிகப் பெரிய பணக்காரர்கள் பின்னணியில் வில்லன்களாகச் செயல்படுவது என நூற்றுக்கணக்கான தமிழ்ப்படங்களில் பார்த்த அதே திரைக்கதை சம்பவங்கள்தான்.
நடிப்பு: ரவி – அரவிந்த்சாமி
“தனி ஒருவன்” நட்சத்திரங்கள் – இடது கோடியில் இருப்பவர் இயக்குநர் மோகன் ராஜா.
முதல் பாதியில் ‘கருத்து கந்தசாமி’யாக நிறைய வாழ்க்கைத் தத்துவங்களையும், மருந்து விற்பனைகள் குறித்த வணிக புள்ளி விவரங்களையும், விளக்கங்களையும், வழங்கி போரடிக்க வைக்கும் ரவி, விஜய்காந்தே எப்போதோ செய்து முடித்து விட்ட புள்ளி விவரக் கணக்குகளை மீண்டும் அடுக்கடுக்காக கூறுகின்றார்.
சாதாரண மக்களுக்கு புரியாத மருந்து விற்பனை வணிக நுணுக்கங்களை இவ்வளவு விலாவாரியாக விளக்க முற்பட்டிருக்கத் தேவையில்லை.
படத்தைக் காப்பாற்றுவது அரவிந்த்சாமிதான். உடல் இளைத்து பணக்காரத் தனமும் வில்லத்தனமும் கலந்து நடை, உடை, பாவனைகளில் கலக்குகின்றார்.
வழக்கமான தமிழ்ப்பட வில்லன்களைப் போல் காட்டுக் கத்தல் இல்லை. கட்டுமஸ்தான உடலைக்காட்டி, சண்டைக் காட்சிகள் இல்லை. ஓட்டங்கள், கார் துரத்தல்கள் இல்லை.
ஆனால், கண்களிலும், உடல் மொழிகளிலும், கதாநாயக அழகோடு, குரூரத்தைக் காட்டி, ஆள் வைத்து கொடுமைகளையும் செய்கின்றார். படத்தின் பாதியில்தான் வருகின்றார் என்பதால், எப்போது காட்சி தருவார் என நாமும் ஆவலுடன் படம் தொடங்கியது முதல் எதிர்பார்க்கத்தொடங்கி விடுகின்றோம்.
கணேஷ் வெங்கட்ராம் முதலில் ஒரு சில காட்சிகளில் கவர்கின்றார். பின்னர் காணாமல் போய்விடுகின்றார்.
பலவீனங்கள்
நயன்தாராவை ஒரு சில காட்சிகள் தவிர்த்து முறையாகப் பயன்படுத்தவில்லை. அவர் அழகு இவ்வளவுதானா என நாம் யோசிக்கும்படி காட்டியிருக்கின்றார்கள்.
தனிஒருவன் என்றுதான் பெயர் வைத்திருக்கின்றார்களே தவிர, ரவி எப்போதும் நான்கு பேர்களோடு சேர்ந்து கொண்டுதான் நடவடிக்கையில் இறங்குகின்றார்.
சரி! தனி ஆள் அரவிந்த்சாமியா என்று பார்த்தால், அவரும் நான்கு பேர்களை வைத்துக் கொண்டுதான் வில்லத்தனங்கள் புரிகின்றார்.
பின் ஏன் தனிஒருவன் என்று தலைப்பு வைத்தார்கள் என்பது தெரியவில்லை.
அதே போல, நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளும், பேசிக் கொள்ளும் போது நாம் வேறு வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போய்விடுவோம் என்று பேசிக் கொள்கின்றார்களே தவிர இறுதிவரை ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள்.
படத்தில் நிறைய தொய்வுகள். படத் தொகுப்பிலும் நிறைய இடங்களில் தேவையில்லாத காட்சிகள். இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டியிருக்கலாம். படத் தொகுப்பில் கவனம் செலுத்தி, சில வாதப் பிரதிவாதங்களை சுருக்கியிருந்தால் அல்லது தவிர்த்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பு கூடி அற்புதமான திரில்லராக உருமாறியிருக்கும்.
அதே போல் இறுதிக் காட்சியில் ரவிக்கும், அரவிந்த்சாமிக்கும் பத்திரிக்கைச் செய்திகள் மூலம் தொடர்பு இருந்ததுபோல் காட்டப்பட்டிருப்பதும் தேவையற்றது.
பாடல்களும் அவ்வளவாக எடுபடவில்லை. இசை வழங்கியிருப்பவர் ஆம்பளை படத்தில் கலக்கிய ஹிப் ஆப் தமிழா. இதில் கொஞ்சம் சுணங்கி விட்டார்.
ஒளிப்பதிவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சில இடங்களில் மங்கலாக இருப்பது போல் தெரிவது ஒளிப்பதிவு நுணுக்கமா அல்லது ஒளிப்பதிவாளர் கோட்டை விட்டு விட்டாரா என்பது தெரியவில்லை.
வழக்கமாக மற்ற மொழிப் படங்களை மட்டுமே தமிழாக்கி படமாக்கி வந்த ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா படத்தை இயக்கியிருக்கின்றார். முதுகைத் தட்டிப் பாராட்டும்படி சொல்லிக் கொள்ள படத்தில் ஏதுமில்லை.
இருப்பினும், பல தொய்வுகள் இருக்கும் படத்தைக் காப்பாற்றுவது அரவிந்த்சாமியின் தோற்றமும் அவரது இயல்பான நடிப்பும்தான்.
அரவிந்த்சாமிக்காக தாராளமாக ஒருமுறை பார்த்து மகிழலாம்.
-இரா.முத்தரசன்