கோலாலம்பூர் – பெர்சே 4 குறியிட்ட மஞ்சள் சட்டைகள், ஆடைகள், டி-சட்டைகள் அணிவது குற்றமாகாது என முன்னாள் கூட்டரசு மேல் முறையீட்டு நீதிபதியும், நாட்டின் முன்னணி சட்ட அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான டத்தோ கோபால் ஸ்ரீராம் அறிவித்துள்ளார்.
இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படையான அச்சக மற்றும் பதிப்பு சட்டத்தில் (Printing Presses and Publications Act) பதிப்பு (“publication”) என்பதற்கான வார்த்தைக்கான அர்த்தத்திற்குள் டி-சட்டைகள் இடம் பெறாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளதாக மலேசியன் இன்சைடர் ஆங்கில இணைய செய்தித் தளம் தெரிவித்தது.
ஆனால், பெர்சே 4 குறியிடப்பட்ட, பதாகைகள், அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களை ஏந்தியுள்ளவர்கள் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டதாகக் கருதப்பட வாய்ப்புண்டு என்றும் ஸ்ரீராம் எச்சரித்துள்ளார்.
பதிப்புகள் என்பது அச்சு வடிவத்திலோ அல்லது மின்னியல் ஊடக (electronic media) வடிவத்திலோ, நிரந்தரமானதாகவோ, தற்காலிகமானதாகவோ இருக்க வேண்டும் என ஸ்ரீராம் மலேசியன் இன்சைடர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி நேற்று விடுத்த அரசாங்கப் பதிவேட்டு (government gazette) அறிக்கையில் பெர்சே 4 குறியிட்ட மஞ்சள் நிறத்திலான அனைத்து பொருட்களும், 1984ஆம் ஆண்டின் அச்சக மற்றும் பதிப்பு சட்டத்தின் கீழ், தடை செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.
அந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதத்தில் ஸ்ரீராமின் பதில் சட்ட விளக்கம் அமைந்துள்ளது.
பெர்சே 4 பேரணி இன்று கோலாலம்பூர், சரவாக் மாநிலத்தின் கூச்சிங், சபாவின் கோத்தா கினபாலு ஆகிய நகர்களில் நடைபெறுகின்றது.