புதுடில்லி – மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டில்லியில் வாழ்ந்த “ராஜாஜி மார்க்‘ இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்றும், அதில் அவர் எழுதிய மற்றும் சேமித்து வைத்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆவணப்படுத்தி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் வகையில் ‘அறிவு சார் தேடல் மையம்’ அமைக்க வேண்டும் என்றும் அப்துல்கலாமின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்துல்கலாமின் அண்ணன் மரைக்காயர், பிரதமருக்கு எழுதிய இத்தகைய கோரிக்கைக் கடிதத்துடன் மரைக்காயரின் பேரன்களான ஷேக் சலீம், ஷேக் தாவூத் மற்றும் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் ஆகியோர் டில்லியில் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினர்.
மேலும், கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதி, நினைவு நாளான ஜூலை 27-ஆம் தேதி ஆகிய தினங்களில், அவரது நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தில் அரசு மரியாதை செலுத்தப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல், கலாமின் இறுதிச் சடங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு ஆதரவு அளித்த மத்திய அரசுக்கு நன்றியையும் அக்கடிதத்தில் கலாம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.