கோலாலம்பூர்- பாஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தனிக்குழுவாக செயல்படும் கெராக்கான் ஹராப்பான் பாரு (GHB), தற்போது பார்ட்டி அமானா நெகாரா (தேசிய அமைதிக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க உள்ளது.
ஏற்கெனவே சங்கப் பதிவிலாகாவில் பதிவு செய்யப்பட்ட மலேசிய தொழிலாளர் கட்சியை (MWP) கையகப்படுத்தி, புதுக்கட்சிக்கான பெயரை சங்கப் பதிவிலாகாவில் பதிவு செய்ய இருப்பதாக அக்கட்சியின் புதிய தலைவரான முகமட் சாபு (படம்) தெரிவித்தார்.
“ஏற்கெனவே பதிவான கட்சியை நாங்கள் பயன்படுத்தக் காரணம், இஸ்லாமிய முற்போக்கு (முன்னேற்ற) கட்சி (Parti Progresif Islam) என்ற பெயரில் புதிய கட்சி துவங்குவதற்கான எங்களுடைய மனுவை உள்துறை நிராகரித்துவிட்டது என்பதுதான். புதிய கட்சியின் கீழ் இஸ்லாத்தின் போராட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் உண்மையாக இருப்போம்,” என நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் முகமட் சாபு கூறினார்.
இந்த அறிவிப்பையடுத்து கெராக்கான் ஹராப்பான் பாருவின் உறுப்பினர்களும் தலைவர்களும் இனிமேலும் பாஸ் கட்சியின் உறுப்பினர்களாக கருதப்பட முடியாது என அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார்.
மலேசிய தொழிலாளர் கட்சியானது கடந்த 1978ஆம் ஆண்டு கங்கா நாயர் என்பவரால் நிறுவப்பட்டது. எனினும் அந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி செயல்பாட்டில் இல்லை.
தேசிய முன்னணிக்கும், அம்னோவுக்கும் எக்காலத்திலும் ஒத்துழைக்கக் கூடாது என்று விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனையின் கீழ், அக்கட்சியின் பெயரை தாங்கள் பயன்படுத்த இருப்பதாக முகமட் சாபு கூறினார்.