புது டெல்லி – தேசிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின், போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை இயக்கக் கூடிய 30 விமானிகள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து அந்நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
மூன்று வருடத்திற்கு முன்பாக 15 கோடி ரூபாய் செலவில், இந்த விமானிகளுக்கு பயிற்சி அளித்த ஏர் இந்தியா, அப்போது விமானிகளிடம் எவ்வித பாதுகாப்பு பிணைப்புகளையும் ஏற்படுத்தவில்லை என தெரியவருகிறது. அதன் காரணமாக பயிற்சி காலம் முடிந்த பிறகு அவர்கள், தங்கள் விருப்பத்தின் பேரில் வேறு விமான நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர்.
ஏறக்குறைய 120 மூத்த விமானிகளில் நான்கில் ஒரு பங்கு விமானிகள், ஏர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதால், அந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறை, மற்ற விமானிகள் மத்தியில் இது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத விமானி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், “ஏர் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஸ்வனி லோகன், இந்த விவாகரம் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையெனில், மேலும் சில விமானிகள் வெளியேற வாய்ப்பு உள்ளது. பயிற்சியில் பாதி காலத்தை தாண்டியவர்களை, தனியார் விமான நிறுவனங்கள் முழு நேர விமானியாக தேர்வு செய்கின்றன. அவர்களுக்கு அங்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்படுவதால் அவர்கள் இங்கிருந்து விலகுவதற்கு முடிவெடுத்து விடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எதிர்காலத்தில் இது போன்று விமானிகள் பயிற்சி காலத்திற்கு இடையே வெளியேறாமல் இருக்க, 5 வருட ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.