புத்ராஜெயா- தலைவர்களின் படங்களை மிதித்து அவமதிப்பது சீனர்கள் மற்றும் மலேசியர்களின் கலாசாரமல்ல என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோங் தியோங் லாய் கூறியுள்ளார்.
அண்மைய பெர்சே பேரணியின்போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் ஆகிய இருவரின் படங்களை சிலர் மிதித்து அவமதித்த சம்பவத்துக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மலேசியர்கள் மிதவாதத்தையும், இன சகிப்புத்தன்மையையும் பின்பற்றி வருகிறோம். இத்தகைய செயல்பாடுகள் (படங்களை மிதித்து அவமதிப்பது) நமது சமூகத்துக்கும் தேசத்துக்கும் அவமானம்” என்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய லியோவ் கூறினார்.
மசீசவை தோற்றுவித்த துன் டான் செங் லாக் காலம் முதற்கொண்டு இன நல்லிணக்கத்தையும் மிதவாதத்தையும் மசீச வளர்த்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழ்நிலையில் ஜசெக இனங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
“நீண்ட காலமாக ஜசெக வெறுப்புணர்வை விதைத்து பரப்பி வருகிறது. எனவே இத்தகைய செயல்பாட்டிற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார் லியோவ்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெர்சே பேரணியில் மசீச முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் பங்கேற்றதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த லியோவ், “அவர் (லியோங் சிக்) மஞ்சள் சட்டை அணிந்திருக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களைக் கவனித்து, அவரது நிலைப்பாடு குறித்து அறிய முற்படுவோம்” என்றார்.