Home கலை உலகம் நாளை கண்டிப்பாகப் பாயும் புலி, சவாலே சமாளி வெளியாகும்: விஷால்அறிவிப்பு!

நாளை கண்டிப்பாகப் பாயும் புலி, சவாலே சமாளி வெளியாகும்: விஷால்அறிவிப்பு!

563
0
SHARE
Ad

27-1440655718-vishal4-600சென்னை- திட்டமிடப்பட்டபடி நாளை பாயும் புலி படமும், சவாலே சமாளி படமும் வெளியாகும் என்று நடிகர் விஷாலும், சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் அருண் பாண்டியனும் அறிவித்துள்ளனர்.

பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், பானு ஆகிய 4 படங்கள் நாளை வெளியிடத் தயாராக இருக்கின்றன.

இந்நிலையில்,வேந்தர் மூவீஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில்,விஷால்-காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ படத்திற்குத் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் திடீர் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, நாளை முதல் எந்தத் தமிழ்ப் படமும் வெளியிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

#TamilSchoolmychoice

இதனால் இந்த 4 படங்களையும் நாளை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘சவாலே சமாளி’படத்தைத் தயாரித்துள்ள நடிகர் அருண்பாண்டியன்,”தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு தன் உறுப்பினர்களுக்கே பாதிப்பாக அமைந்துள்ளது. ‘பாயும் புலி’ படத்துக்கு ஏற்பட்டிருப்பது தனிப்பட்ட பிரச்சினை.

மற்ற தயாரிப்பாளர்களின் பாதிப்பைக் கருத்தில் கொள்ளாமல், 24 மணி நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது  பாதகமான முடிவு. படம் திரைக்கு வருவதைத் திடீர் என்று தள்ளி வைத்தால், வெளிநாடுகளில் எங்கள் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவார்கள்.

மேற்கொண்டு எந்தப் படத்தையும் அங்கு திரையிட முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே திட்டமிட்டபடி, ‘சவாலே சமாளி’ படத்தைத் திரைக்குக் கொண்டு வருவோம்.
நாங்கள் தயாரித்துள்ள ‘சவாலே சமாளி’படம் எந்தச் சவாலையும் சமாளிக்கும். திட்டமிட்டபடி நாளை சவாலே சமாளி படம் 170 தியேட்டர்களில் திரையிடப்படும்”
இவ்வாறு அருண்பாண்டியன் கூறினார்.

இதேபோல்,தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் அறிவிப்பால் மிகவும் வருத்தமடைந்த விஷால், “பிரச்னையை ஏன் கடைசி நேரத்தில் கொண்டு வருகிறார்கள்? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு முன்பே இதைச் சரி செய்திருக்கலாம் அல்லவா? இச்செயல் முறையற்றது. ஒரு விநியோகஸ்தருக்காகவும் சில திரையரங்குகளுக்காகவும் ஏன் படத்தை நிறுத்தவேண்டும்?” என்று தன் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆகையால், இன்று பாயும் புலி படம் பிரச்சினை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதனையடுத்து விஷாலும் இயக்குநர் சுசீந்திரனும் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில்

“பிரச்னைகள் தீர்ந்தன. பாயும் புலி நாளை வெளியாகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவிய சங்கங்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து,தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, “பாயும் புலி உள்ளிட்ட அனைத்துப் படங்களும் நாளை வெளியாகும்” என மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் சங்கப் பிரச்சினையில்  விஷாலுக்கு எதிராக உள்ள சரத்குமார் இப்பிரச்சினையில் நடிகர் விஷாலுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.