Home அரசியல் “ஹிண்ட்ராப் இப்போது அதன் முந்தைய பலத்துடன் இல்லை” – ஜ.செ.க குலசேகரன்

“ஹிண்ட்ராப் இப்போது அதன் முந்தைய பலத்துடன் இல்லை” – ஜ.செ.க குலசேகரன்

1153
0
SHARE
Ad

m-kulasegaranமார்ச் 11 – ஹிண்ட்ராப் இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், பேராக் மாநில ஜனநாயக செயல் கட்சியின் (ஜ.செ.க) தலைவர்களில் ஒருவருமான குலசேகரன் (படம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய மலேசியகினி இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட அவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்  பின்வருமாறு:-

“வருகிற 13 வது பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் இயக்கம், பக்காத்தான் வழியில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் இவ்வேளையில், அதைப் பற்றி எனது நடுநிலைமையான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன் இவ்விஷயம் தொடர்பான சில அடிப்படைத் தகவல்களை இங்கே விவரிக்கிறேன்.”

#TamilSchoolmychoice

“கடந்த சில வாரங்களுக்கு முன் எனது கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், ஹிண்ட்ராப் மற்றும் பி.கே.ஆர் கட்சியினரின் பொது விவாதங்களில் கலந்து கொண்டு தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் பற்றித் தெரிந்துகொள்ளுமாறு எனக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், நான் சமீபத்திய ஆண்டுகளில் ஹிண்ட்ராப் கட்சியினரால் “மண்டோர்” என்றும் மற்றும் “ஓடும் பிள்ளை” போன்ற தரக்குறைவான வார்த்தைகளாலும் விமர்சிக்கப்பட்ட காரணத்தால் அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை.

ஹிண்ட்ராப்பின் எழுச்சி தான் ஏழை இந்திய மக்களின் விடியலுக்கு வழி வகுத்தது என்ற சுய கர்வத்தையும் சுய தம்பட்டத்தையும் அடைந்துவிட்ட அவர்களுடன் அமர்ந்து விவாதங்களில் பங்கேற்க எனக்கு விருப்பமில்லை.

என்னைப் பொறுத்தவரை, மலேசியாவிலுள்ள எல்லா மக்களுக்கும் இனப்பாகுப்பாடு இன்றி பொதுவான நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் மற்றும் நமது நாட்டில் இந்திய சமூகத்தினரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்பதால் அவர்களின் பிரச்சனைகள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உடன்பாடு உள்ளவன்.

ஹிண்ட்ராப் போராட்டம் 

நவம்பர் 25, 2007 ஆம் ஆண்டு இந்திய ஏழை மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக,கோலாலம்பூரில் ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

இந்தப் போராட்டம் விதைத்த அடித்தளம் தான் தேசிய முன்னணி அரசுக்கு 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்க முடியாமல் போனதற்கு உதவியது.

ஆனால் துரதிஷ்டவசமாக, அதன் பிறகு ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர்கள் சிலர் கர்வம் கொண்டு பல எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கத் தொடங்கினர். அவர்கள் நிந்தனைக்கு ஆளானவர்களில் குறிப்பாக இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பக்காத்தானைச் சேர்ந்த சில தலைவர்களும் அடங்குவர்.

ஹிண்ட்ராப் பொறுப்பாளர்களின் இது போன்ற பண்புகள்தான் மலேசிய இந்திய மக்கள் சார்பாக அவர்கள் வெளியிட்ட 18 அம்சக் கோரிக்கையில் மற்ற சிறும்பான்மை அமைப்பினருக்கு இடமில்லாமல் போனதற்குக் காரணம்.

இந்நிலையில் ஹிண்ட்ராப் இயக்கம் வருகிற பொதுத்தேர்தலில் சில நாடாளுமன்றத் தொகுதிகளில் பக்காத்தானுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் தான் அந்த விவாதங்களில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை.

மலேசியாவில் வாழ்வாதாரங்கள் இன்றித் தவிக்கும் பல இந்தியக் குடும்பங்களுக்கு உதவ பி.கே.ஆர், பாஸ்  மற்றும் ஜ.செ.க கட்சிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. ஹிண்ட்ராப் இதுபோன்ற முயற்சிகளை செய்யவில்லை என்று நான்கூறவில்லை.

அதேநேரத்தில் தாங்கள் தான் இந்திய மக்களின் துயர் துடைக்க வந்த விடிவெள்ளி என்ற சுய கர்வம் நிறைந்த அவர்களின் அணுகுமுறையைப் பற்றித் தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

அம்பிகா சீனிவாசனின் எழுச்சி 

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேர்தல் நடைமுறைகளில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பான பிரச்சனை மிகப் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.இந்நிலையில் மக்களின் பிரதிநிதியாகத் தோன்றிய அம்பிகா சீனிவாசன் தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

அவர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக தேர்தல் ஆணையம், தேர்தல் முறைகேடுகளை கவனத்தில் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்தது. இதன் மூலம் அம்பிகா சீனிவாசன், இந்திய சமூகம் மட்டுமின்றி அனைத்து மலேசிய மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஈப்போவிலுள்ள ஒரு முக்கிய விடுதியில் ஒருவருக்கு  50 ரிங்கிட் என கட்டணம் செலுத்தி  ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சீன மக்கள், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான அம்பிகாவின் பேச்சைக் கேட்க அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். மேலும் ஏராளமான மக்கள் போதிய இடம் இல்லாமல் அரங்கிற்கு வெளியே காத்திருந்தனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மக்கள் கொட்டும் மழையிலும் அம்பிகாவின் பேச்சை கேட்க அதே  ஈப்போவில் திரண்டிருந்தனர்.

இதுவரை நான் மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் யாவும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ஒரு இயக்கத்தின் தலைவர் என்பவர் எந்த ஒரு சுய கர்வமும் இன்றி மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதே கொள்கையுடன் போராடிக்கொண்டு இருக்கும் மற்ற இயக்கங்களுடனும் கைகோர்த்து, இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை, கடந்த சில வருடங்களாக ஹிண்ட்ராப் இயக்கத்தைச் சேர்ந்த சிலரின் தரக்குறைவான வார்த்தைகளாலும், சுய கர்வத்தினாலும் அவ்வியக்கம் அதன் நிலையிலிருந்து தாழ்ந்து விட்டது.

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் அவ்வியக்கத்தில் நிலவிய வலுவான கொள்கைகள் இப்போது அவர்களிடம் இல்லை என்பதே எனது கருத்து.

சரித்திரபூர்வ வாய்ப்பை தவறவிட வேண்டாம்

இனத்தாலும், மதத்தாலும் ஆண்டாண்டு காலமாக பிளவுபட்டுக் கிடக்கும் நமது அரசியல் கலாச்சாரத்தை – சூழ்நிலையை மாற்றியமைத்து நீதியை நிலைநாட்டும், அனைவருக்கும் – குறிப்பாக ஏழை மற்றும் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை சமுதாயத்திற்கு சம உரிமையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும் ஓர் அபூர்வமான சரித்திரபூர்வமான வாய்ப்பு நமக்கு இப்போது வாய்த்திருக்கின்றது.

மீண்டும் இன அடிப்படையில் பிரச்சனைகளை அணுகாமல், அனைவருக்கும் சமவாய்ப்பு அனைவரது வறுமை நிலைக்கும் தீர்வு என்ற கண்ணோட்டத்தில் நாம் அரசியலை அணுக வேண்டியது அவசியமாகும்.

அப்போதுதான் காலம் காலமாக இருந்து வரும் கொள்கைகளையும், சட்டதிட்டங்களையும் நம்மால் மாற்றியமைக்க முடியும். அதற்காக அனைத்து தரப்பினரின் முயற்சியும் அவசியமாகும்”

-இவ்வாறு குலசேகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.