Home இந்தியா சென்னை- மங்களூர் ரயில் விபத்து: காயமடைந்தோருக்கு ஜெயலலிதா நிதியுதவி!

சென்னை- மங்களூர் ரயில் விபத்து: காயமடைந்தோருக்கு ஜெயலலிதா நிதியுதவி!

551
0
SHARE
Ad

jayalalithaசென்னை – சென்னை-மங்களூர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்குத் தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து மங்களூருக்குச் சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயில் நள்ளிரவு 2.30 மணிக்குக் கடலூர் விருத்தாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.   இதில் 42-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டுட் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப்பணிகளை தேசியப் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

“சென்னை- மங்களூர் ரயில் விபத்தில் 42 பேர் காயமடைந்த செய்தியறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

இந்தச் செய்தி குறித்த தகவல் எனக்கு கிடைக்கப் பெற்றவுடன், எனது உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் அலுவலர்கள், காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோர் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்குத் தேவையான அவசரக் கால உதவிகளையும், காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

எனது ஆணையின் பேரில், பாதிக்கப்பட்ட பயணிகள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மாற்று வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்கள் அனைவரும் விரையில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயில் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்குத் தலா 25,000 ரூபாயும் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.