பத்ராக் – ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏவுகணைத் தளமான வீலர் தீவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் பெயரைச் சூட்டி அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
“மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒடிசா மீது பரிவு காட்டியவர்.அதுபோல் அவர் மீது ஒடிசா மாநில மக்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.
கடந்த 1993-ஆம் ஆண்டு அப்துல் கலாம் விஞ்ஞானியாக இருந்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்காக வீலர் தீவை ராக்கெட் ஆராய்ச்சிப் பயன்பாட்டிற்கு எனது தந்தையும், அன்றைய முதல்வருமான பிஜு பட்நாயக் வழங்கினார்.
கலாம் பெயரை வீலர் தீவுக்குச் சூட்டுவதால் இளைஞர்களிடம் அறிவியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் மறைவிற்குப் பின் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தஙகள் மாநிலத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வுக் கூடம் ,சாலை முதலியவற்றிற்கு அவரது பெயரைச் சூட்டி வருகின்றனர்.அவ்வகையில் தற்போது ஒடிசாவும் ஒரு தீவிற்கே அவரது பெயரைச் சூட்டி அழகு பார்த்துள்ளது.
இவையெல்லாம் ஒவ்வொரு மாநிலமும் அப்துல் கலாம் மீது வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையுமே காட்டுகின்றன.