Home இந்தியா கட்சிக்குள் இருந்தபடி சகுனி வேலை பார்த்ததில்லை: ஸ்டாலினுக்கு அழகிரி பதிலடி!

கட்சிக்குள் இருந்தபடி சகுனி வேலை பார்த்ததில்லை: ஸ்டாலினுக்கு அழகிரி பதிலடி!

898
0
SHARE
Ad

சென்னை- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தலையெடுக்க, கங்கணம் கட்டிக் கொண்டு, தனது 90-ஐத் தாண்டிய வயதிலும் அயராது பாடுபட்டு வரும் கலைஞர் மு.கருணாநிதிக்கு பெரும் தலையிடியாக இருப்பது அவரது இரு மகன்களுக்கும் இடையிலான இடைவிடாத போராட்டம்தான்.

அந்த வகையில் ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி மீண்டும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளார்.

திமுகவின் மீது தாம் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருப்பதாகவும், கட்சிக்குள் இருந்தபடியே தாம் சகுனி வேலை பார்த்ததில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் திடீரென ஆஸ்திரேலியாவுக்குப் பயணமானார் அழகிரி. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, திமுகவின் தலைவராக, இன்று வரையில் கருணாநிதி இருக்கும்போது, அவரைத் தவிர்த்து, முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் எங்கிருந்து வருகிறார் என்பதே தன்னைப் போன்ற திமுக அனுதாபிகளின் கேள்வியாக உள்ளது என அவர் கூறினார்.

Alagiri-Stalin
“திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, நான் என்ன கருத்தைச் சொன்னேனோ, அந்தக் கருத்தை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன். அண்மைய கருத்துக் கணிப்பு தொடர்பாக ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் ‘மக்கள் ஆய்வு மையம்’ நிறுவனர் பேராசிரியர் ராஜநாயகத்துக்கும், சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்.

“நான் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும், யாராலும் முழுமையாக பதிலளிக்க முடியாது என்பது தெரியும். இருந்தாலும், ‘முதல்வர் வேட்பாளர் யார்’ என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம், திமுக தலைமைக்கும், ஸ்டாலினுக்கும் ஏற்பட்டது” என்று அழகிரி தெரிவித்தார்.

இனி மு.க.ஸ்டாலினின் தொண்டரடிப்பொடிகள், ‘திமுகவின் அடுத்த முதல்வர்’ என எந்த இடத்திலும் கூவக்கூடாது என்றும், அவ்வாறு அவர்கள் கூறும் பட்சத்தில் திமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழகிரி வலியுறுத்தினார்.

அத்தகையவர்களை கட்சியில் இருந்து நீக்கினாலும் தவறில்லை என்று கூறிய அவர், கட்சி மீது பற்றுதலும், பாசமும் இருப்பதால்தான், கட்சியில் எந்தத் தவறு முன்னிலைப் படுத்தப்பட்டாலும், அதை துணிச்சலுடன் எதிர்ப்பதாகவும், கேள்வி கேட்பதாகவும் தெரிவித்தார்.

“கட்சிக்குள் இருந்தபடியே, சிலரைப் போல சகுனி வேலை பார்ப்பது என் பணியல்ல. ஒருநாளும் திமுகவைச் சிதைக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. காரணம், நானும் இந்த இயக்கத்துக்காக, உழைப்பை, வியர்வையை சிந்தியிருக்கிறேன்,” என்று அழகிரி மேலும் கூறினார்.

ஸ்டாலினை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்து அழகிரி தொடர்ந்து இவ்வாறு பதிலடி கொடுத்து வருவதால் திமுகவில் சலசலப்பு நீடித்து வருகிறது.