Home Featured நாடு அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் தலைமறைவான மர்மம் தொடர்கின்றது! முற்றும் எரிந்த நிலையில் அவரது கார்!

அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் தலைமறைவான மர்மம் தொடர்கின்றது! முற்றும் எரிந்த நிலையில் அவரது கார்!

982
0
SHARE
Ad

ஹூத்தான் மெலிந்தாங் – காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வரும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் முற்றிலும் எரிந்த நிலையில் நேற்று ஹூத்தான் மெலிந்தாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது திடீர் மறைவு குறித்து பரபரப்பு தகவல்கள் எழத் தொடங்கியுள்ளன.

Kevin - Morais - Burnt car -

கெவின் மொராய்ஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் முற்றிலும் எரிந்த நிலையில்…(படம்: நன்றி – ஸ்டார்  செய்தித் தளம்)

#TamilSchoolmychoice

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சர்ச்சைக்குரிய மிகப் பெரிய வழக்குகளை கெவின் கையாண்டு வந்தார் என்பதால் அவர் காணாமல் போனது குறித்த வதந்திகள் பெருகத் தொடங்கியுள்ளன.

ஊழல் தடுப்பு ஆணையம் கவலை

இதற்கிடையில், அவர் காணாமல் போன காரணங்கள் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று மாலை அறிவித்தது.

அவர் காணாமல் போனது குறித்து தாங்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் டத்தோ அசாம் பாக்கி, அவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்படுவார் என்றும், காவல் துறையினர் அவரைக் கண்டுபிடிக்கும்வரை அவரது குடும்பத்தினர் அமைதி காப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, கெவின் மொராய்ஸ் (படம்) ஊழல் தடுப்பு ஆணையத்தின் சார்பில் பல பெரிய வழக்குகளை கையாண்டு வந்திருக்கின்றார் என்றும் அசாம் தெரிவித்துள்ளார். தற்போது அவர் மீண்டும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல் அலுவலகம்) பணிக்குத் திரும்பியிருக்கின்றார்.Kevin Morais

வெள்ளிக்கிழமை காலை மெனாரா டூத்தாவிலுள்ள தனது இல்லத்திலிருந்து வேலைக்குச் சென்ற கெவின் அப்போது முதல் எங்கும் காணப்படவில்லை.

காலை 9.00 மணியளவில், WA6264Q. என்ற எண் கொண்ட புரோட்டோன் பெர்டானா அரசாங்கக் காரில், புத்ரா ஜெயாவிலுள்ள தனது அலுவலகம் நோக்கி சென்ற  கெவின் மொராய்ஸ், அதன்பின்னர் தொடர்பில் இருந்து விடுபட்டுள்ளார்.

அவரது நண்பர் ஒருவர், காலை 10.30 மணியளவில் அவரைத் தொடர்பு கொண்டபோதும் அவர் தொலைபேசித் தொடர்பில் கிட்டவில்லை என்றும் பின்னர் பிற்பகல் 3.00 மணியளவில் மீண்டும் அழைத்தபோதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

கெவின் மொராய்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது அன்று அவர் வேலைக்கு வரவில்லை என அவரது செயலாளர் தெரிவித்ததாகவும் அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட காருக்கும், கெவின் காணாமல் போனதற்கும் இடையில் தொடர்பு இருக்குமா என்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது என கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் துணை ஆணையர் டத்தோ சைனுடின் அகமட் தெரிவித்துள்ளார்.