சென்னை- ரஜினியின் அடுத்த படமான ‘கபாலி’ குறித்து தினந்தோறும் ஏதேனும் தகவல் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. ‘கபாலி’க்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது என்பது அவற்றுள் ஒன்றாக வெளியாகியிருக்கும் அண்மைத் தகவல்.
‘கபாலி’ படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. ரஜினியின் நடிக்கும் படங்களின் பூஜை வழக்கமாக, ஏவி.எம். ஸ்டூடியோவில்தான் நடைபெறும்.
அந்த வகையில் ‘கபாலி’ பூஜையும் அங்கேதான் நடைபெறுகிறது.
இதையடுத்து முதற்கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் தொடங்குகிறார்கள். அங்கு முதல் காட்சி படமாக்கப்பட்ட கையோடு, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னை பூந்தமல்லி பகுதியில் இதர காட்சிகள் பல படமாக்கப்பட உள்ளன.
கடற்கரைப் பகுதியில் சில நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருப்பதால், அங்கு ரஜினி தங்குவதற்கென தனி விருந்தினர் இல்லம் ஒன்றை அனைத்து வசதிகளுடனும் தயாரிப்பாளர்கள் தயார்படுத்தி வருவதாகக் கேள்வி.