கான்பெர்ரா – ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவின் வனப்பகுதியில், பல வருடங்களாக ரோமங்கள் நீக்கப்படாமல், அளவிற்கு மீறிய சுமையை சுமந்து கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செம்மறி ஆடு ஒன்றை, விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் மீட்டு, அதன் ரோமங்களை நீக்கி காப்பாற்றி உள்ளனர்.
கிரிஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆடு, அதிகாரிகளின் கண்ணில் பட்ட அந்த நாளிலேயே, உலக அளவில் புகழ்பெற்று விட்டது. ஆட்டின் ரோமங்களை நீக்க முடிவு செய்த அதிகாரிகள் , இதில் அனுபவமிக்க ஐந்து பேர் அடங்கிய குழுவை உதவிக்கு அழைத்தனர். பலவருடங்களாக ஆட்டின் ரோமங்கள் நீக்கப்படாததால், புதிதாக நீக்கும் போது ஆடு இறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதனால் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஆட்டிற்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னர், சுமார் 42 நிமிடங்களில் பொதி மூட்டை அளவில் இருந்த ஆட்டின் ரோமங்கள் நீக்கப்பட்டன.
சுமார் 40 கிலோ எடை கொண்ட அந்த ரோமங்களைக் கொண்டு, 30 கம்பளி ஆடைகள் தயாரிக்க முடியும் என விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரோமங்கள் நீக்கப்பட்ட பிறகு, தற்போது கிறிஸ் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.