கலிஃபோர்னியா – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த 2006-ம் ஆண்டு அறிவித்த ‘ஆப்பிள் கேம்பஸ் 2’ (Apple Campus 2), 175 ஏக்கர் பரப்பளவில் ஏறக்குறைய அனைத்து வேலைகளும் முடிந்து திறப்பதற்குத் தயாராகி வருகிறது.
2016-ம் ஆண்டு கடைசியில் அல்லது 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் எப்படியும் திறந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடும் உழைப்பைக் கொட்டி உருவாகி வரும் இந்த அதிநவீன வளாகத்தை சமீபத்தில், ஆளில்லா விமானங்கள் மூலம் படம் பிடித்த டங்கன் சின்பீல்ட் என்ற புகைப்படக் கலைஞர், அதனை வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஸ்டீவ் ஜாப்சின் அறிவிப்பில் இருந்து தொடங்கும் அந்த காணொளி, வளாகம் முழுவதையும் காட்சிபடுத்தி நமக்கு பிரமிப்பை அளிக்கிறது.
இந்த வளாகத்தில், சுமார் 2.3 மில்லியன் சதுர அடியில், 13,000 ஊழியர்கள் வசிப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஆயிரம் பேர் அமரக்கூடிய அதிநவீன அரங்கமும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் 3 லட்சம் சதுர அடியில் ஆய்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வளாகத்தில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த வளாகம் முழுவதும், முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெற்று இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது தான். இதற்காக சுமார் 7 லட்சம் சதுர அடியில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆப்பிள் வளாகம் பற்றி சின்பீல்ட் கூறுகையில், “ஆகாயத்தில் இருந்து ஆப்பிள் வளாகத்தை பார்க்கையில், விண்வெளி நிலையம் போல் காட்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதன் காணொளியைக் கீழ் காண்க: