புதுடில்லி – சுப்பிர மணியசாமிக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்து இருந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்துப் பாரதீய ஜனதா தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியசாமி சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்திருந்தார்.அதனால் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்திருந்தது.
இதை எதிர்த்துச் சுப்பிரமணியசாமி, தன் மீதான அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரியும், அவதூறு வழக்கைத் தொடர வழிவகை செய்யும் சட்டப்பிரிவை நீக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவர்மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.