கோலாலம்பூர் – அராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹுசைன் அகமட் நஜாடியின் கொலைக்கும், துணை அரசாங்கத் தரப்பு வழக்கரிஞர் கெவின் ஆண்டனி மொராயிஸ் மாயமானதற்கும் தொடர்பு இருப்பதாக நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி கருதுகிறார்.
நேற்று இது குறித்து பாஸ்கல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விவகாரத்தில் ஒரு தொடர்பு உள்ளது. இது ஊடகங்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் சட்டத்துறைத் தலைவர் மற்றும் ஐஜிபி ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஹுசைன் நஜாடி கொலையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரணை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கெவினின் உறவினர் ரிச்சர்டு மொராயிஸ் தான் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி, குவான் யின் கோயிலில் நஜாடியை கடைசியாகப் பார்த்த ஒருவர் என்று பாஸ்கல் நம்பகமான இடத்தில் இருந்து தனக்குக் கிடைத்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நஜாடியுடனான சந்திப்பிற்குப் பிறகு ரிச்சர்டு அங்கிருந்து சென்ற அடுத்த சில நிமிடங்களில் நஜாடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.