லாஸ் வெகாஸ் – அமெரிக்காவின் புகழ்பெற்ற சூதாட்ட நகரான லாஸ் வெகாஸ் நகரத்தின் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் தீப்பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தீப்பிடித்தபோது விமானத்தில் 159 பயணிகளும், 13 பணியாளர்களும் இருந்தனர். ஆனாலும் அனைவரும் வெகு சீக்கிரமாக, பத்திரமாக, விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இருவருக்கு மட்டும் சிறு காயங்களுக்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
BA2276 என்ற வழித்தடத்தைக் கொண்ட போயிங் 777 விமானம், லாஸ் வெகாஸ் நகரில் மேக் கேரன் விமான நிலையத்திலிருந்து, இலண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கிப் புறப்பட இருந்தது. ஆனால், தரையிலிருந்து மேலெழ முடியாமல், இயந்திரத்தில், தீப்பிடித்ததைத் தொடர்ந்து விமானம் நிலையம் கரும் புகையால் சூழப்பட்டது.
அமெரிக்க உள்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடந்தது.