ஷா ஆலாம் -நேற்று இரவு இங்குள்ள காற்பந்து அரங்கில் நடைபெற்ற மலேசியாவுக்கும், சவுதி அரேபியாவும் இடையிலான 2018 உலகக் கிண்ண தேர்வாட்டத்தின் போது, மலேசிய இரசிகர்கள் ஆத்திரம் கொண்டு, திடலில் பட்டாசு வெடிகளையும், புகைமூட்டம் உருவாக்கும் சிறுரக வெடிகளையும் வீசியதில் ஏற்பட்ட கலாட்டாவில், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
அண்மையில் 10-0 கோல் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசுவிடம் தோல்வி கண்ட மலேசியாவுக்கு, நேற்றைய சம்பவம் மேலும் ஒரு களங்கமாகும். அந்தத் தோல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், மலேசியக் காற்பந்து சங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும் நேற்றைய கலாட்டா அமைந்ததாகக் கூறப்படுகின்றது.
“அல்ட்ராஸ் மலாயா” (Ultras Malaya) எனக் கூறிக் கொண்ட ஒரு கும்பல் இந்த கலாட்டாவில் ஈடுபட்டதாக நம்பப்படுகின்றது.
45 நிமிட முதல் பாதி ஆட்டம் நடைபெறும்போது அமைதியாக இருந்த இந்தக் கும்பல், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே கலாட்டாவைத் தொடக்கியது. அப்போது சவுதி அரேபியா 2-1 கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.
புகைமூட்டம் ஏற்படுத்தக் கூடிய சிறுவெடிகள், நெருப்புச் சிதறல்களை உருவாக்கும் பட்டாசு போன்ற பொருட்கள், ஆகியவற்றை இரசிகர் கூட்டம் விளையாட்டுத் திடலுக்குள் வீசியதைத் தொடர்ந்து விளையாட்டாளர்கள் பாதுகாப்புக்காக திடலை விட்டு வெளியே ஓடி, அடைக்கலம் தேடிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, காற்பந்து ஆட்டத்தின் நடுவரான ஹாங்காங்கைச் சேர்ந்த லியு குவோக் மான் , எல்லா ஆட்டக்காரர்களையும், காற்பந்து சங்க அதிகாரிகளையும், உடைமாற்றும் அறைக்கு அழைத்து கலந்தாலோசித்தார்.
இரண்டு காற்பந்து குழுக்களின் நிர்வாகிகளும் ஆட்டத்தைத் தொடர்வதற்கு சம்மதிக்காத காரணத்தால், அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆட்டம் நிறுத்தப்படுகின்றது என அவர் அறிவித்தார்.