சென்னை – திமுக-அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த்தும், ஒரு சில தருணங்களில் விஜயகாந்த்தும் கூறி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தேமுதிக தலைவரிடம் அந்த முடிவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்திய பேட்டியிலும் விஜயகாந்த்தின் இந்த முரண்பாடு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பேட்டி ஒன்றில், கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில், விஜயகாந்த் மழுப்பலான பதிலைத் தெரிவித்துள்ளார்.
“நேரு, அண்ணா போன்ற தலைவர்கள், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கூட்டணி பற்றி பேசுவதே அதிகம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றி இப்பொழுது கூற முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கடந்த சில நாட்களாக அவரும், அவரது மனைவி பிரேமலதாவும், “திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று” என்று கூறி வந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விஜயகாந்த் கண்டிப்பாக அதிமுக கூட்டணி போக வாய்ப்பில்லை என்பதால், கூட்டணி பேரத்தை வெகு விரைவில் திமுக ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது.