சண்டிகார் – பிரதமர் நரேந்திர மோடி இன்று யூனியன் பிரதேசமான சண்டிகருக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார்.
சண்டிகர் விமான நிலையத்தில் புதிய கட்டிடம் ஒன்றைத் திறந்து வைக்கிறார். பின்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். சண்டிகரில் புதிய வீடு வழங்கும் திட்டத்தின் சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொள்கிறார்.
மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் காலத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது அவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்,அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருப்புக் கொடி காட்டவும் காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் உத்தரகாண்டில் உள்ள ரிசிகேசுக்குச் செல்லும் பிரதமர், அங்கு சுவாமி தயானந்த கிரியைச் சந்தித்துப் பேச உள்ளார். இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் ஷஹரன்பூரில் நடைபெறும் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.