ஹாங்காங் – பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடையதாக நம்பப்படும் ஹாங்காங் வங்கிக் கணக்கில் உள்ள 250 மில்லியன் அமெரிக்க டாலர் குறித்த விசாரணையை ஹாங்காங் காவல் துறையினர் தொடக்கியுள்ளனர்.
இந்தத் தகவலை டைம் இணைய செய்தித் தளம் வெளியிட்டிருக்கின்றது.
அம்னோ கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ள கைருடின் அபு ஹாசான், நஜிப்புடன் தொடர்புடைய நான்கு நிறுவனங்கள் ஹாங்காங்கிலுள்ள பேங்க் கிரெடிட் சுவிஸ் வங்கியில் பணத்தை செலுத்தியிருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இன்னொரு புறத்தில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்ட தகவல்களைத் தொடர்ந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி, நாட்டின் அரசியலையே உலுக்கி வருகின்றது.
இருப்பினும் கைருடின் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே மறுத்துள்ள பிரதமர் அலுவலகம், 700 மில்லியன் அமெரிக்க டாலர் தனக்கு வழங்கப்பட்ட அரசியல் நன்கொடை எனக் குற்றச்சாட்டுகளைத் தற்காத்து வருகின்றார். தன்மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் நஜிப் கூறிவருகின்றார்.
பைனான்சியல் டைம்ஸ் செய்தியொன்றை மேற்கோள் காட்டி, நஜிப்பின் வங்கிக்கணக்குகள் என நம்பப்படும் விவகாரம் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஹாங்காங் காவல் துறையினர் உறுதிப் படுத்தியுள்ளதாகவும் டைம் இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.