Home Featured உலகம் 69.86% வாக்காளர் ஆதரவுடன் மீண்டும் பிஏபி – 6 தொகுதிகளில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி!

69.86% வாக்காளர் ஆதரவுடன் மீண்டும் பிஏபி – 6 தொகுதிகளில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி!

393
0
SHARE
Ad

Lee Hsien Loong - Singapore PM -

சிங்கப்பூர் – ஜனநாயக மாற்றங்கள் ஏற்படும் என்ற பரவலான எதிர்பார்ப்புகளை முறியடித்து ஆளும் பிஏபி கட்சி மீண்டும் அபரிதமான வெற்றியைப் பெற்று சிங்கையில் ஆட்சியில் அமர்கின்றது.

2001 ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கட்சி பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகின்றது. 69.86 சதவீத வாக்காளர் ஆதரவைப் பெற்றிருக்கும் பிஏபி, பல தொகுதிகளில் தனது வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டியது.

#TamilSchoolmychoice

கடந்த தேர்தலில் தோல்வி கண்ட புங்கோல் ஈஸ்ட் தொகுதியை பிஏபி மீண்டும் கைப்பற்றியுள்ளது. அல்ஜூனிட் கூட்டுத் தொகுதியில் மிகக் குறுகிய வித்தியாசத்திலேயே பிஏபி தோல்வி கண்டுள்ளது.

சிங்கப்பூர் தனிநாடாக சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டதற்குப் பின்னர், முதன் முறையாக அனைத்து 89 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளிடமிருந்து நேரடிப் போட்டிகள் நிலவிய காரணத்தால், இந்த முறை நாடாளுமன்றத்தில் கூடுதலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் ஓர் உறுப்பினரைக் கொண்ட 13 தொகுதிகளில் 12ஐ பிஏபியே கைப்பற்றியது. ஜூரோங் ஜிஆர்சி தொகுதியில் அதிக பட்சமாக 79.28 சதவீத வாக்குகளை பிஏபி பெற்றது.

எதிர்க்கட்சிகளின் வெற்றி

leeதொழிலாளர் கட்சி மீண்டும் அல்ஜூனிட் ஜிஆர்சி தொகுதியை 50.95 சதவீத வாக்குகளைப் பெற்று குறுகிய பெரும்பான்மையில் மீண்டும் கைப்பற்றியது. ஹவுகாங் எஸ்எம்சி தொகுதியில் 57.69 சதவீத வாக்குகள் பெரும்பான்மையில் மீண்டும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இதே தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் 62.1 சதவீத வாக்குகளை தொழிலாளர் கட்சி பதிவு செய்திருந்தது.

மொத்தத்தில் கடந்த தேர்தலை விட 9.72 சதவீத கூடுதல் வாக்குகள் புள்ளிகளை பிஏபி பெற்றிருக்கின்றது. கடந்த முறை மொத்தம் 60.14 சதவீத வாக்கு வங்கியை மட்டுமே பிஏபி பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாகத்தான் இந்த முறை எதிர்க்கட்சிகள் மேலும் கூடுதல் தொகுதிகளை வெல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

2017இல் நடத்தப்பட வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்தினார் பிரதமர் லீ சியன் லுங்.

இரு கோண அரசியல் வியூகம் வெற்றி 

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் மறைவினால் ஏற்பட்டிருந்த அனுதாபத்தைப் பயன்படுத்திக் கொள்வது, அதே வேளையில் சிங்கை தேசிய தினத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் மூலம் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தி-

சிங்கையின் கடந்த கால சாதனைகளை மக்களின் மனங்களில் நிலைநிறுத்துவது என்ற இரு கோண அரசியல் வியூகங்களோடு களமிறங்கிய லீ சியன் லுங்கிற்கு அவர் எதிர்பார்த்தது போலவே இந்த மாபெரும் வெற்றி கிடைத்திருக்கின்றது.

இரவு 9.30 மணி முதல் உத்தேச தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியவுடன் இது “பிஏபியை நோக்கி தேசிய அளவில் மக்களின் அலை” என்ற வர்ணிப்புகள் வலம் வரத் தொடங்கின.

எதிர்க்கட்சி ஆதரவாளர்களோ, டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் சோகத்துடன், ஆத்திரத்துடனும், ‘இது என்ன நாடாளுமன்றம்?” என்றும் “இனிமேல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சிங்கப்பூரியர்கள் எதைப் பற்றியும் புகார் செய்யக்கூடாது” என்றும் கடுப்பாக தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.

பிஏபி கட்சியின் வெற்றியை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இனி வாக்களிக்காதவர்களுடனும் இணைந்து பணியாற்றி சிங்கப்பூரை முன்னேற்றப் போவதாகவும் பிரதமர் லீ சியன் லுங் தனது வெற்றிச்செய்தியில் கூறியிருக்கின்றார்.

-இரா.முத்தரசன்