காணொளியில் காட்டப்படும் விமானம்
கோலாலம்பூர் – பெயர் மாற்றம், அதிகாரப் பொறுப்புகள் மாற்றம் என பழைய சுவடுகளை மறந்து ஒட்டு மொத்தமாக மாறி புத்துயிர் பெற்றதாக இயங்கி வரும் மலேசியா ஏர்லைன்சிற்கு அவ்வபோது ஏதாவது ஒரு வழியில் புதிய புதிய சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
அப்படி சமீபத்தில், நட்பு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்ட காணொளியில், சவூதி அரேபியாவின் ஜிட்டாஹ் நகரில் விமானம் ஒன்று கடுமையான புழுதிப் புயலில் சிக்கி, சாதாரண சாலையில் அவசரமாக தரையிறக்கப்படுவதாகக் காட்டப்பட்டது. குறிப்பிட்ட அந்த விமானம் மலேசியா ஏர்லைன்சிற்கு சொந்தமானது என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இதனை முற்றிலும் மறுத்துள்ள மாப் (மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்), இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
“அந்த காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை. எங்களின் அனைத்து விமானங்களும் ஜிட்டாஹ் நகரில் பாதுகாப்பாகத் தரையிறங்கின. எனினும், புழுதிப் புயல் தொடர்பாக எச்சரிக்கை வந்தது உண்மை தான். அதன் பேரில் எங்களது விமானங்கள் ஓடுபாதையில் பாதுகாப்பாக நின்றிருந்தன” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.