சென்னை- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் (படம்) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தனித்துப் போட்டி என பாமகவும், காங்கிரசும் அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக காங்கிரஸ் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளங்கோவன் இப்படியொரு தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்று டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் இளங்கோவன் (படம்). பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று அணியாக பாமக உள்ளது என்றார்.
“எங்கள் தலைமையை ஏற்று யார் வந்தாலும் வரவேற்போம். தேர்தல் நேரத்தில் எங்கள் அணிக்கு வருவார்கள் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எங்களைப் பார்த்துக் கூறி இருப்பது நிறைவேறாத ஒன்று. 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனை பாமக ஏற்படுத்தும்” என்று இராமதாஸ் கூறியுள்ளார்.