
மருத்துவ மாணவியை கற்பழித்த 6 பேரில் ராம்சிங்தான் மிக கொடூரமாக நடந்து கொண்டவன் ஆவான். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவன் மாணவியை 2 தடவை பலாத்காரம் செய்தான்.
அதோடு மாணவியையும் அவரது நண்பரையும் 2 தடவை இரும்பு கம்பியால் சரமாரியாக இவன் தாக்கினான். பஸ்சில் இருந்த மாணவியை நிர்வாணமாக தள்ளி விட்ட பிறகு அவர் மீது பஸ்சை ஏற்றி கொல்லவும் முயற்சி செய்தான்.
இப்படி அடுக்கடுக்காக மிருகத்தனமாக நடந்து கொண்டதால் ராம்சிங் மீது மட்டும் போலீசார் 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். எனவே அவனுக்கு தூக்கு உறுதி என்ற நிலை இருந்தது.
ராம்சிங் தற்கொலை பற்றி தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை ஆவேசமானார். அவர் கூறியதாவது:-
என் மகள் சாவில் மிக முக்கிய குற்றவாளி ராம்சிங்தான் என்று போலீசாருக்கு தெரியும். அப்படிப்பட்டவனை போலீசார் எப்படி கண்காணித்து வந்தனர் என்று தெரியவில்லை.
அவனை இப்படியா சாக விடுவது? அவன் தற்கொலை செய்து கொள்ள போலீசார் விட்டிருக்கக் கூடாது. போலீசார் தங்கள் கடமையில் இருந்து தவறி விட்டனர்.
போலீசாரால் ஏற்பட்டுள்ள இந்த தோல்வியால், இனி இந்த வழக்கு விசாரணை என்ன ஆகுமோ தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவியின் தாய் கூறுகையில், என் மகள் சாவுக்கு நீதி வேண்டும். முக்கிய குற்றவாளி செத்து விட்டான். குற்ற உணர்வே அவனை கொன்று விட்டது என்றார்.