ஷா ஆலம்- இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையிலான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்றும், இன உணர்வுகளின் அடிப்படையிலான தலைமைத்துவத்தை வழங்க வேண்டாம் என்றும் மலாய் அரசியல் பிரமுகர்களை பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் எச்சரித்துள்ளார்.
நாட்டில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தக்கூடிய மலாய் சமூகத்தில் இருந்து தலைவர்கள் வரவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய தலைவர்களை இஸ்லாத் வழிநடத்த வேண்டுமே தவிர, மலாய் வெறித்தனம் வழிநடத்தக் கூடாது என்றார்.
“தலைவர்கள் கொள்கைகள் உடையவர்களாக இருத்தல் வேண்டும். நம்பத்தகுந்த (நம்பிக்கையூட்டும்) ஜனநாயகத்தையே இஸ்லாம் போதிக்கிறது. பணத்தை மையப்படுத்திய ஜனநாயகத்தை அல்ல. அனைத்து சமூகங்கள் மீதும் அக்கறை தேவை. பிற சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பிற மதத்தைச் சேர்ந்த மக்களுடனும், கலாச்சாரத்துடனும் இணக்கமான போக்கை கடைபிடித்து அமைதியாக வாழ வேண்டும் என்றே இஸ்லாம் சொல்கிறது.”
“பல்வேறு இன, மத மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட நாடு மலேசியா. இங்கு அனைவரும் ஒரே சமூகமாக இணக்கத்துடன் வாழ வேண்டும். பிற இனங்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது குறிப்பிட்ட நாடோ விலகி நிற்பது சாத்தியமல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதை மறுக்க இயலாது,” என்று ஹாடி அவாங் கூறியதாக த ஸ்டார் ஆன்லைன் ஊடகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் போதுமான இயற்கை வளங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு இருந்தும் எதனால் நாடு பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பண வீக்கம் என்பது பெரும் சுமையாக உள்ளது. ரிங்கிட் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது. பாஸ், அம்னோ மற்றும் இதர கட்சிகளுக்கு இடையேயான தொடர் மோதல்கள் நாட்டின் நிர்வாகத்தைப் பாதிக்கிறது. ஏழை, பணக்காரர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல், அனைத்து மலேசியர்களுக்குமான நிலையான பொருளாதார பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்,” என்றார் ஹாடி அவாங்.