ஏதென்ஸ் – எப்போது முடிவிற்கு வரும் அகதிகளின் உயிர் போராட்டம் என்று தெரியவில்லை. வாழவே முடியாத சூழலில் சிரியா, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து தப்பித்து உயிருக்காகவும், அடிப்படை வாழ்வாதாரத்திற்காகவும் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு பயணப்படும் அகதிகள் தொடர்ந்து படகு விபத்துகளினால் தங்கள் உயிரை பறிகொடுத்து வருகின்றனர். தினசரி செய்தியாக விட்ட இவர்களின் மரணம் இன்றும் நிகழ்ந்துள்ளது.
துருக்கியிலிருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அகதிகளின் படகு, துருக்கிக்கும் கிரீஸ் தீவிற்கும் இடைப்பட்ட சிறிய தீவான பார்மகோனிசி தீவுக்கு அருகில் சென்றபோது விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, கிரீஸ் நாட்டு கடற்படையினர், 68 அகதிகளை மீட்டனர். எனினும், படகில் பயணப்பட்டவர்களில் 34 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. பலியானவர்களில் 14 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.