மும்பை – 2006 –ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளுக்குச் சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிக்கவிருக்கிறது. இதனால் முமபை நகர் முழுவதும் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது. அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் விதத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 11–ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் –இ– தொய்பா தீவிரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில் இந்திய இஸ்லாமிய ‘சிமி’ இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,வெவ்வேறு வழித்தடங்களில் சென்ற 7 ரயில்களில் குண்டு வைத்து வெடிக்கச் செய்தனர். இதில் 188 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர்; 829 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் லஸ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பான வழக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது.
13 பேரில் அப்துல் வாகித் சேக் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 12 பேரும் குற்றவாளிகள் எனச் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்து கடந்த வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளித்தது.
இக்குற்றவாளிகள் 12 பேர் மீதும் ‘மோக்கா’ சட்டப்பிரிவின் கீழ் அதிகபட்சமாகத் தூக்குத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.
இந்நிலையில் அவர்களுக்கு இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. ஆகையால் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.